Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, September 25, 2012

தெய்வம் இருப்பது எங்கே?


இந்திய கலாச்சாரம் ஆன்மீக பின்புலத்தால் கட்டமைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வழிபாடு என்பது அனைத்து மதத்திற்கும் பொதுவான ஒரு விஷயமாக இருப்பதால், வெவ்வேறு மதத்தவரும் தத்தம் வழிபாட்டுமுறைகளை செய்து ஆன்மீக நிலை அடைய முயல்கிறார்கள்.

வேதகால கலாச்சாரம் இந்தியாவில் வேர் ஊன்றி இருப்பதால் வேறு நிலப்பரப்பில் தோன்றிய மதங்கள் ஆனாலும் இந்தியாவிற்கு வந்தவுடன் அவைகள் வேதகால ஆன்மீக தன்மையை பெற்றுவிடுகிறது. 

கிருஸ்துவம் பாரத தேசத்திற்குள் வந்தவுடன் தன் இயல்பை நமக்காக மாற்றி பூசாரிகளும், சடங்குகளும், ஒளி ஏற்றுவதுமாக தன்னை சரி செய்துகொண்டது. 

இஸ்லாமும் இறைவன் ஒருவனே, அவனே வணங்கத்தக்கவன் என சொன்னாலும், நம் நாட்டிற்கு வந்தவுடன் பல இஸ்லாமியர்கள் நபியையும், இஸ்லாமிய ஞானிகளையும் வணங்க துவங்குகிறார்கள் என்பதை பார்க்கிறோம்.  அதனாலேயே இங்கே வேர்விடும் எந்த மதமும் தன்னை வேத மதமாக மாற்றுகிறது என்கிறேன்.

பலர் காப்பாற்ற துடிக்கும் இந்து மதத்திற்கும் வேதமதத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதை அறியவேண்டும். நம் கலாச்சாரத்தில் பலவேறு மதங்கள் வேதமதமாக மாற்றம் அடைந்தாலும், நம்மில் பலருக்கு வேத கால ஆன்மீக நிலை என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.

கோவில்கள் மற்றும் ஆகம சாஸ்திரம் இவை தோன்றி அதிகபட்சம் 3000 ஆண்டுகளே ஆகிறது. அதற்கு முன் வேதகால ஆன்மீக நிலையில் மனிதன் இயற்கையையே வழிபட்டான். மஹாசக்தி, அக்னி, வருணன், வாயு மற்றும் இந்திரன் என அவனின் வழிபாடு இயற்கையை நோக்கியே இருந்தது. பிற்காலத்தில் இவை மாற்றம் அடைந்து தெய்வ வழிபாடு என்ற நிலைக்கும், ஆலய வழிபாடு என்ற நிலைக்கும் மேம்பட்டது.

ஆதி சனாதான தர்மத்திலிருந்து தற்சமயம் இருக்கும் சனாதான தர்ம நிலைக்கு வழிபாடுகள் மாற்றம் அடைந்ததும்  கோவில்களின் தோற்றம் உருவானது. 

தெய்வீக செயல்களுக்கு உருவங்கள் அளித்து மனிதன் வழிபடத்துவங்கிய காலக்கட்டம் ஆரம்பித்தது.தெய்வ வழிபாடு என்பது ஏதோ ஆலயம் தொழுதல் சாலவும் நன்று என்பதை போல நன்னெறி அல்லது ஒழுக்கம் சார்ந்த செயலாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் வழிபாடு என்பது கடமை சார்ந்தது, உரிமை சார்ந்தது மற்றும் வாழ்வியல் சார்ந்த ஒரு அறம் என பலருக்கு தெரிவதில்லை.

தெய்வ வழிபாடு இவ்வாறாக மூன்றாக பிரிக்கப்படுகிறது. நம் மொழி வழக்கில் சொல்வதானால் குலதெய்வம், ப்ரார்தனை தெய்வம், இஷ்ட தெய்வம் என வகைப்படுத்தலாம்.

வழிபாட்டு முறைகளை நாம் சிறு வயது முதல் கற்றுக்கொண்டாலும் நம் நம்பிக்கை மற்றும் மனதுக்கு அருகாமையில் ஒரு தெய்வத்தை வைத்திருப்போம். இதுவே இஷ்ட தெய்வம் என்பதாகும். மிக சிக்கலான காலத்திலும், எதிர்பாராது ஏதேனும் நடக்கும் சமயம் உங்கள் உதடு முனுமுனுக்கும் தெய்வம் இஷ்ட தெய்வம் என்று கூறலாம். சிலருக்கு பிள்ளையாரப்பா , பலருக்கு முருகா என்றும் ஜூசஸ் என முனுமுனுப்பதையும் நாம் பார்த்திருக்கலாம்.

ப்ரார்த்தனா தெய்வம் என்பது நம் செயல்களுக்கு எதிர்பார்த்து வணங்கும் தெய்வத்தை குறிப்பிடலாம். பரிட்சைக்கு போகும் முன் நம் மாணவர்களுக்கு ஹயக்ரீவர் அல்லது சரஸ்வதியின் ஞாபகம் வரும் அல்லவா? அது போல தேவைக்கு ஏற்ப வணங்கும் தெய்வத்தை ப்ரார்தனா தெய்வம் என்கிறோம். இஸ்லாமியர்கள் பழனிக்கு வருவதும், இந்து மதம் சார்ந்தவர்கள் நாகூர் அல்லது வேளாங்கன்னி போவதும் ப்ரார்த்தனா தெய்வத்தை வணங்க என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இஷ்ட தெய்வம், ப்ரார்த்தனா தெய்வம் என்பது என்ன என உங்களுக்கு புரிந்திருக்கும். எனக்கு பிடித்த தெய்வத்தை வணங்குவேன் என நீங்கள் உரிமையுடன் சொன்னால் அது இஷ்ட தெய்வம். என வாழ்க்கை முறைக்கு இது தேவை அதனால் வணங்குகிறேன் என்றால் அது ப்ரார்த்தனா தெய்வம். குலதெய்வம் என்பது என்ன தெரியுமா? உங்கள் கடமை..!

(தொடரும்)

6 கருத்துக்கள்:

Sanjai said...

லார்ட் விக்னேஸ்வர் கிரிக்கெட் விளையாடுறத பார்த்தா சுப்பண்டிக்கு ஒரே குய்யப்பமா இருக்கே :) #T20WorldCup

திவாண்ணா said...

உண்மையில் வழிபாடு என்பது கடமை சார்ந்தது, உரிமை சார்ந்தது மற்றும் வாழ்வியல் சார்ந்த ஒரு அறம் என பலருக்கு தெரிவதில்லை.//

ஆஹா! மேலே சொல்லுங்க!

pranavastro.com said...

இஸ்லாமியர்களுக்கு இஷ்ட தெய்வம் பிரார்த்தனை தெய்வம் குல தெய்வம் எல்லாம் ஒன்று தானே அப்படிருக்க ஹிந்துக்களுக்கு மட்டும் இந்த மூட பழக்கம் இன்னும் தேவையா ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சஞ்சய், திரு திவாஜி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரணவ ஆஸ்ட்ரோ,

இஸ்லாமியர்களுக்கு ஒன்றுதான் என யார் உங்களுடம் வந்து சொன்னது? இஸ்லாமை பற்றி உங்களுக்கு தெளிவு உண்டா? முதலில் உங்களின் அறிவை மேம்படுத்துங்கள் பிறகு யாருக்கு மூடப்பழக்கம் இருக்கிறது என்ற தெளிவு கிடைக்கும்.

Sivakumar said...

//இஸ்லாமியர்களுக்கு ஒன்றுதான் என யார் உங்களுடம் வந்து சொன்னது? இஸ்லாமை பற்றி உங்களுக்கு தெளிவு உண்டா? முதலில் உங்களின் அறிவை மேம்படுத்துங்கள் பிறகு யாருக்கு மூடப்பழக்கம் இருக்கிறது என்ற தெளிவு கிடைக்கும்.//
ஸ்வாமி, அவரு வின், தமிழன் டிவிக்களையும், தற்போது அச்சமூகம் நடந்து கொண்ட விதத்தையும் பார்த்து அப்படி கேட்டிருப்பார். ஆனால், உண்மை அவ்வாறு இல்லை.