Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, February 21, 2012

காசித் திருப்பயண அனுபவம் பகுதி 3


சுப்ரமணியன் முத்துக்கிருஷ்ணன் - மதுரை

உண்மையான துவக்கம்:

ஆதி சங்கரர் அருளிய காசி பற்றிய மூன்று அருமையான படைப்புகளான பஜ கோவிந்தம், காசி பஞ்சகம் மற்றும் மணிகர்ணிகாஷ்டகம் ஆகியவற்றின்அறிமுகத்துடன் (சுவாமிகள் அனுப்பியவை) எங்கள் காசித் திருப்பயணம் முன்னதாகவே துவங்கிவிட்டது..   உண்மையிலேயே காசி, கங்கை, கயை,விஸ்வநாதர், மணிகர்ணிகை என்ற தீர்த்த கரை, பார்வதி, சிவன் மற்றும் பிரயாகை இவைகள் எதைக் குறிக்கின்றன என்பது பற்றிய விளக்கங்களும்அருமையான துவக்கம்.   (இவைகளை அனைவரும் படித்துப் பயன் பெற வெளியிட்டு அருளுமாறு ஸ்வாமிகளை எல்லோர் சார்பிலும் வேண்டிக்கொள்கிறேன்.  இனி இக்கட்டுரை மூலம் காசிக்கு மீண்டும் ஒருமுறை சென்று வரலாம்.. வாருங்கள் ...

காசி வாசிகளானது:

17 ஜனவரி காலை சுமார் எட்டு மணிக்கு கோவையிலிருந்து சுவாமிஜியுடன் எங்களுக்கு வெகு முன்னதாகவே வந்திருந்த குழுவினருடன் காசி புகை வண்டிநிலையத்தில் இணைந்து கொண்டோம்..

காசியின் குளிரா அல்லது வயிரென்னும் அடுப்போ அல்லது புகை வண்டி நிலையத்தின் தாக்கமோ .. எதுவென்று தெரியவில்லை..  அனைவர் வாயிலிருந்தும்புகை வந்து கொண்டிருந்தது... இருந்தாலும் சிலர் இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம் என்பது போல வழக்கமான உடையுடன் காணப்பட்டார்கள்.. 

(இரண்டொரு நாட்களில் அவர்கள் அருகில் சென்று பார்த்தாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு நான்கைந்து உடைகளுக்கு உள்ளே தஞ்சம் அடைந்தனர் :) 

[கட்டுரையாளர் சுப்பிரமணியனின் நிலையை புகைப்படத்தில் தெரிந்துகொள்ளலாம் :)) ]

ஆட்டோக்கள் உதவியுடனும், மேலும் குறுகலான சந்துகள் வழியே சிறிது நடந்தும், தங்குமிடமான குமாரசுவாமி மடத்தை வந்தடைந்தோம்.  தங்கி இருந்தஇடத்திற்கு மிகச்சில அடி தூரத்தில் கங்கை பிரவாகமாய் ஓடிகொண்டிருந்தது..  மிகவும் அருமையான இடம்..  " ஹனுமாருக்கு துணியோ பொருளோவழங்குவதாக 'வேண்டுதல்' செய்து கொண்ட அன்பர்கள் மட்டும் தங்கள் அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து கொள்ளலாம்" என்ற எச்சரிக்கைவழங்கப்பட்டது..  இது வெளியே ஜன்னலில் ஆங்காங்கு தொங்கிகொண்டிருந்த ஹனுமான் சுவாமிகளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.. குளிருக்கு ஏதுவானகாரமான காலை உணவு கிடைத்தது..   

இந்த குளிரில் கங்கையிலா.. என்று யோசித்துக் கொண்டிருந்த சிலருக்கு  இனிப்பாக சுவாமிகளின் அறிவிப்பு .. "சாப்பிட்ட உடன் குளிப்பது நல்லதல்ல.  ஆகவே ஒரு மணி நேரம் கழித்து 11 :30 மணிக்கு குளிக்கலாம்" என்பதுதான் அது..  11 :30 மணிக்கு மதுரையைப்போல மொட்டை வெயில் அடிக்கும். எனவே நீண்ட நேரம் குளிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி..  வெப்ப நிலையில் ஒன்றும்பெரிய மாற்றம் இல்லை.. மெகா சைஸ் பிரீசருக்குள் இருந்து உற்பத்தியாகி ஓடுகிறதோ என்று என்னும்படி ஓடிக் கொண்டிருந்தது..

கங்கையில் நீராடியது:

ஒருவாறாக மனதைத் திடப்படுத்தி படிக்கட்டுகளில் கங்கைக்குள் இறங்கியபோது நண்பர்கள் சொன்ன மந்திரம் .. " படியில் பார்த்து காலை வையுங்க .. பாசம் அதிகம்.."  (வாழ்கையின்) பாசம் பற்றிய எச்சரிக்கையோ !! :) ....  மிகவும் ஆனந்தமாக குளிரைச் சரணடைந்து நீண்ட நேரம் நீராடினோம்... சுவாமிஜிஎங்கள் கைகளைப் பற்றிக்கொள்ள கங்கையில் மூழ்கியவாறு ஜபம் (ஜல  ஜபம்) செய்த பேறுபெற்றோம்.  புண்ணிய தலங்களில்எல்லாம் உயர்ந்ததான காசியில், நதிகளில் எல்லாம் சிறந்ததான கங்கையில், பிராணிகளில் உயர்வானதான பசுக்களின் அருகாமையில், கேதார நாதர் கோவில்படித்துறையில், புண்ணிய நாட்களில் (தை அமாவசையிலும்), அருள் வடிவான குருவின் அருகில் அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு கங்கையில் நீராடியதும், ஜல ஜெபம் செய்ததும் பெறற்கரிய பேறு அல்லவா.. இன்னும் ஒரு வாரம், காலையும் மாலையும் இப்பேறு பெறுவோம்என்று அப்போது அறியவில்லை..

காசியில் மூர்த்தியினும்(விஸ்வநாதர்) தீர்த்தம் (கங்கை) முக்கியமானது என்பது ஸ்வாமிகள் வாக்கு.  எனவே இத்திருப்பயணத்தில்காலையும் மாலையும் கங்கையில் நீராடுவதே முக்கியமாக அமைந்தது..

காசியில் தெய்வ தரிசனம் செய்தது:

விஸ்வநாதர், விசாலாக்ஷி மற்றும் அன்னபூரணி தரிசனம் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றோம்.  பின்னர் தினமும் காலையும் மாலையும் விஸ்வநாதர்மற்றும் அன்னபூரணி தரிசனம் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றோம்.  ஞான வைரக்யத்தை அளிக்கும் படி வேண்டிகொண்டோம்.   ஞானக்கேணி தரிசித்துதீர்த்தம் பெற்றோம்.  அருகில் ஸ்தல விருட்சம் தரிசித்தோம்.  விஸ்வநாதர் கோவில் நந்தி வேறு திசை நோக்கி அமைந்திருந்ததைக் கண்டோம்.   நம் கையினால்எடுத்து வந்த கங்கை நீரால் விஸ்வநாதரை அபிஷேகம் செய்யும் வாய்ப்பும், நாம் கொண்டு வந்த குங்குமத்தால் அன்னபூரணி சன்னதியில் உள்ள ஸ்ரீ மேருவைஅர்ச்சிக்கும் வாய்ப்பும் பெற்றோம்.


ஞான வைராக்கியத்தை வாங்க 
கடையில் நிற்கும் திரு.சுப்பிரமணியன் :))

அன்னபூரணி உறையும் அன்னதானக் கூடத்தில் அருமையான உணவை பிரசாதமாக உண்ணும் வாய்ப்பும் சில நாட்கள் பெற்றோம்.  டிரஸ்ட் அமைத்துஏற்பாடு செய்திருக்கிறார்கள்...இதற்கு நன்கொடை அளிக்கும் வாய்ப்பு உங்கள் வாழ்நாளில் அமையுமானால் அதை நழுவ விடாதீர்கள்..   கோவில் வாசல்பகுதிகளில் பூக்கடைகள் இருந்தன.  ஒரு சிறிது கூட பூ வாசனை என்பதே அங்கு இல்லை. டூ மச் ஆக நீங்கள் நினைத்தாலும் இதுதான் உண்மை.  தினமும்கேதார் நாதருக்கு கங்கையால் அபிஷேகம் செய்து ஜெபம் செய்துதான் அன்றைய நாள் துவங்கியது.  மந்திர சாஸ்திரத்திற்கு உலகிலேயே புகழ் பெற்ற காசிநகரில் மக்கள் மாலையும் கையுமாக ஜெபம் செய்வதை மிகவும் சாதாரணமாகக் காணலாம்.  ஊருக்கு திரும்பியதும் காசி எப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்த இடம்என்பதை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள்.

வித்யாச்சல்:

காசியிலிருந்து சுமார் 4 மணி நேரம் பயணம் செய்து 'வித்யா விலாசினி' அன்னை வாசம் செய்யும் 'வித்யாச்சல்' வந்தடைந்தோம்.  இது ஒரு முக்கியமான சக்திபீடம்.  இங்கே இருந்த விக்ரகங்கள் எல்லாம் வித்தியாசமாகத் தென்பட்டது.. சுமார் 12 அடி நீளம் 12 அடி அகலம் 12 அடி ஆழம் உடைய மிகப் பெரிய ஹோமகுண்டம் அங்கே இருந்தது.. அதன் அருகே ஜபம் செய்தோம்.  இன்றும் இக்கோவிலில் மிருக பலி செய்யும் வழக்கம் இருப்பதை அறிந்து கொண்டோம். முற்காலங்களில் இந்த பெரிய ஹோம குண்டத்தில் பெரிய மாடு போன்ற மிருகங்கள் கயிற்றின் மூலம் மேலிருந்து யாக ஹவிசாக இறக்கப்ப்படுமாம்.  அதைஹோம குண்டத்தில் நெருப்பிலிருந்து வளையல்கள் அணிந்த அன்னையின் கைகள் பெற்றுக்கொள்ளுமாம். 

சீதா மட்:


வித்யாச்சலில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து இந்த இடத்திற்கு வந்தோம்.  சீதை என்ற 'ப்ருக்ரிதி'யின் அம்சம் பூமி என்ற'ப்ருக்ரிதி'யின் அம்சத்துடன் இணைவதைக் குறிக்கும், சீதை பூமிக்குள் போகும் நிகழ்வு நிகழ்ந்த இடமாக இது நம்பப்படுகிறது.  மிகவும் சமிபத்தில் இங்கேகோவில் எழுப்பி இருக்கிறார்கள்.  இந்த இடமே இயற்கை சூழ்ந்த ரம்மியமான இடமாக சிறு குளம் போன்றதற்கு நடுவே இருந்தது.   இங்கே சீதை பூமிக்குள்போகும் நிகழ்வை தத்ரூபமாக சிலை வடிவில் செய்து வைத்து இருக்கிறார்கள்.  இந்த ஒன்றை மட்டும் பார்ப்பதற்கே கூட இங்கே போய் வரலாம்.  அத்துணைஅருமை.   நுழைவுப் பகுதியில் சுமார் 30 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் நமக்கு விஸ்வ ரூப தரிசனம் தருகிறார். 

கயை :

விஷ்ணுவின் பாதமாக வணங்கப்படும் கயையை தரிசித்தோம்.  (காசியிலிருந்து சுமார் 4 மணி நேர பயணம்). உடன் வந்தவர்கள் தர்ப்பணம் செய்தார்கள். அதற்கு மிகவும் விசேஷமான இடமாம்.  இங்கே ஒரு நதி ஓடுவதாகவும், அது சீதையின் சாபத்தால் பூமிக்குக் கீழே ஓடுவதாகவும் சொன்னார்கள்.  ஏறக்குறையஅது அப்படித்தான் காணப்பட்டது.  இந்தப் பிரதேசமெல்லாம் பீகாரில் இருக்கிறது. 

திரி-வேணி-சங்கமம் @ சங்கம்:

ஜவஹர்லால் நேரு பிறந்த ஊரான அலஹாபாத் நகரில் இது இருக்கிறது.  இல்லை.. இங்கேதான் நேரு பிறந்தார். :)  கங்கை-யமுனை-சரஸ்வதி என்ற மூன்றுநதிகளின் சங்கமம் இந்த இடமாகும்.  ஸ்வாமிஜி கூறியது, " கங்கை-யமுனை-சரஸ்வதி ஆகிய இவை நம் பூமியாகிய உடலில் பிங்கள-இடா -சுஷும்னா நாடிகளையும்(பிண்டத்தில்), சூரியன்-சந்திரன்-குரு ஆகிய கிரகங்களையும் (அண்டத்தில்) குறிக்கிறது.  கிரகங்களின் இயக்கமும், உடலின் நாடிச்சலனமும், நதிகள்சங்கமிக்கும் இடங்களும் தொடர்புடையது.  இந்த இடத்தில் குளிக்கும் போது (எந்த வித பயிற்சியோ பிற முயற்சியோ இன்றி) இயல்பாகவே நாடிச்சலனம்உண்டாகி சுஷும்னா நாடியில் இருக்கலாம்.  12 வருடங்களுக்கு ஒரு முறை (குரு - சூரியன் - பூமி ஆகியவை குறிப்பிட்ட ராசிகளில் இருக்கும் தருணமான) மஹா கும்ப மேளாவின் போதும் உலகில் இந்த குறிப்பிட இடத்தில் இதற்கான சூழல் உண்டாகிறது.  

இது தவிர ஒவ்வொருவருடமும் இதற்கு நெருக்கமான கிரக அமைப்பு இது போல வரக்கூடிய சுமார் இரண்டு வார காலத்தை 'மகா மேளா'வாகக் கொண்டாடுவார்கள்.  இப்போதுநாம் வந்திருக்கும் இந்த தருணமும் அப்படிப்பட்ட ஒரு மகா மேளா தருணம்தான். "  ஆற்றின் நடுவே மணலை குவித்து இடுப்பளவு ஆழம் இருக்கும்படி செய்துஇருக்கிறார்கள்.  படகில் ஆற்றின் நடுவே சென்று குளித்தோம்.  அப்போது சூரிய அஸ்தமனம் துவங்கியது.  படகிலேயே 'தன்வந்த்ரி' ஹோமம் செய்தது மிகவும் வித்தியாசமான மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது.  இங்கே ஆதி சங்கரருக்கு சுமார் மூன்று மாடி உள்ள கோவில் இருக்கிறது.  கோவிலின் வாசலில் அவர்வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வான 'மண்டனமிச்ரர் மற்றும் அவர் மனைவி 'சாரதா' வுடன் வாதம் செய்து வெற்றி பெற்ற இடத்தில் அந்த காட்சி சிற்பமாகவைக்கப்பட்டு இருந்தது.  

அந்த பகுதியில் ஸ்வாமிஜி ஒரு சாதுவை எங்களுக்கு காட்டினார்.  அவர் ஒரு பெரிய தண்ணீர் தொட்டியின் மேல் இருந்த இடத்தை அறை போல அமைத்துக் கொண்டிருந்தார்.  அவர் உணவு உண்பதோ அல்லது அந்த இடத்தை விட்டு இறங்கி வருவதோ இல்லை என்றும் மஹா கும்பமேளாவின் போது பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை, சாதுக்கள் குளிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட அந்த ஒரு நாள் மட்டும் அந்த இடத்தில் இருந்து கீழே இறங்கி வந்து குளித்துவிட்டு மீண்டும் அங்கேயே சென்று அமர்ந்து கொள்வார் என்று கூறினார்.  உணவின் மேல் அதிகம் பற்று கொண்ட என் வயிற்றை நான் கடிந்து கொண்டேன்.  

அடுத்த வருடம் மஹா கும்பமேளா என்றும், சுமார் இருபத்தி ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கே கூடுவார்கள் என்றும் கூறினார்.  தாமும் தனியே வரத் திட்டமிட்டுள்ளதாகவும், எங்களில் யாரேனும் வந்தால் அவரை எப்படி கண்டுபிடித்து சந்திப்பது என்ற உபாயத்தையும் கூறினார்.  சிலருக்கு தலை சுற்றியது.  

ஒன்றுமட்டும் உண்மை.  இறைவா!! இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பை மட்டும் எங்களுக்கு அருள்வாயாக.. அந்தக் கூட்டத்தில் ஸ்வாமிஜியை சந்திப்பது ஒன்றும் நமக்கு கடினமல்ல.  ஏனெனில் எங்களுக்கு வேண்டுமானால் எங்கள் குருவை கண்டுபிடிக்கும் திறன் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் நம் குருவோஏற்கனவே, பல நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்த பூமியில், அவர்களுக்கு மத்தியில் நம்மை சரியாகக் கண்டு பிடித்து நமக்கு அருள்செய்தவர் அன்றோ!! அப்படிப் பட்டவருக்கு சில லட்சம் பேருக்கு நடுவே நம்மைக் கண்டு பிடிப்பதா கடினம்? (காசியில் தொலைந்தவர்கள் உட்பட).  ஆகவே இறைவா!! இதில்கலந்து கொள்ளும் வாய்ப்பை மட்டும் எங்களுக்கு அருள்வாயாக..சந்திப்பை ஸ்வாமிஜி பார்த்து கொள்வார்கள்..  :)

புத்த கயா:

புத்தர் ஞானோதயம் பெற்ற போதி மரத்தின் கீழ் அவருக்கு ஒரு கோவில் எழுப்பி இருக்கிறார்கள்.  இது ஆரம்பத்தில் விஷ்ணு கோவிலாகஇருந்ததாகவும் பின்னர் பௌத்த கோவிலாக மாற்றப்பட்டதாகவும் கேள்வி.  இரண்டு முறை வெட்டப் பட்ட பிறகும் உள்ளதே தற்போது உள்ள இந்த போதிமரம்.  இந்த போதி மரத்தின் கிளையின் ஒரே பகுதியை எடுத்து இலங்கையிலும் அதிலிருந்து ஒரு கிளையை எடுத்து மதுரையிலும் வளர்வதாக அறிந்தோம்.  மதுரைவாசிகள் அது எந்த இடம் என்று அறிவீர்களா? புத்த துறவிகள் கைலாய மலையை விழுந்து வணங்கி வலம் வருவதற்கு இங்கே முதலில் அதேபோல செய்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.  பயிற்சியில் வெற்றி பெற்றால் அடுத்தது இமாலய முயற்சி !! இங்கே சில முக்கியமான புத்த துறவிகளின்சமாதிகளும் உள்ளது.  சில துறவிகள் கூட்டமாகவும் சிலர் தனித் தனியாகவும் சமாதி ஆகி உள்ளார்கள்.  புத்தரின் பாதம் இங்கே கல் வடிவில் வைக்கப்பட்டுள்ளது.  புத்தருடைய தத்துவங்களை பாடல் வடிவில் சில அன்பர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.  அநேகர் அதைச் சுற்றி அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்கள்.  நாங்களும் அந்த இடத்தில் சிறிது நேரம் தியானம் செய்தோம்.

சாரநாத்:

இங்கே ஒரு சைனீஸ் புத்த கோவிலுக்கு சென்றோம்.  அங்கே புத்தர் பற்றியும் சாரநாத் ஸ்தூபி பற்றியும் பல குறிப்புகள் கண்டோம். புத்தரின் 24 போதனைகளை ஆரங்களாகக் கொண்ட சக்கரத்தின் சிலையும் நான்கு புறமும் முகம் கொண்ட சிங்கத்தின் சிலையும் இருந்தது.  பின்பு அங்கேஉள்ள புத்த கோவிலுக்கு சென்றோம்.  இது போதி தர்மருடைய கோவில் என்றும் கேள்வி.  புத்தர் முதன்முதலில் தம் சீடர்களுக்கு (மௌனமாகவே) உபதேசம்செய்த இடத்தைப் பார்த்தோம். சாரநாத் ஸ்தூபியையும் கண்ணுற்றோம்.  இது பல முறை சிதைக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.  அங்கே ஒருஅருங்காட்சியகம் உள்ளது.

கால பைரவர் கோவில்:

காசியே கால பைரவரின் கட்டுப்பாட்டில் உள்ளது அன்றோ!!. கூட்டம் கடுமையாக இருந்தது.  பூசை தொடங்கும் போது ஒரு மெகா சைஸ் உடுக்கை ஒன்றுஅடித்தார்கள்.  அதன் சப்தமே வித்யாசமாக, நமக்குள் எதோ செய்வது போல இருந்தது.  தரிசனம் முடித்து அங்கே எல்லாரும் காசி கயிறு வாங்கிக்கொண்டோம். 

மேற்கண்ட கோவில்கள் தவிர காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு ஹனுமான் கோவில், பிர்லா மந்திர், துளசிதாசர் இராமாயணம் எழுதிய  துளசி மானஸ் மந்திர், துர்க்கா மந்திர் ஆகியவற்றை தரிசித்தோம்.  

துர்க்கா கோவில் விவேகானந்தரின் வாழ்வில் முக்கிய இடம் பெற்ற ஒரு கோவில் இது.  அவர் இக்கோவிலில் இருந்த போது ஒரு குரங்கு திடீரென்று அவரை துரத்தஆரம்பித்தது. அவரும் ஓட ஆரம்பித்தார்.  சிறிது தூரம் சென்றதும் நான் எதற்காக ஓட வேண்டும் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது.  அவர் திரும்பி அதைசந்திக்கத் தயார் ஆனார்.  அப்போது அது அங்கே காணப்பட வில்லை.  மனமாகிய குரங்கை எதிர்த்து வென்றதும் இந்த துர்கையின் அருளால்தான்.

கங்கா ஆரத்தி:

தினமும் மாலை இங்கே கங்கையை வணங்கும் முகமாக கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடை பெறுகிறது.   ஐந்தாறு பேர்கள் ஒன்று போல சடங்கு வடிவில் பூஜைகள்செய்கிறார்கள்.  பின்னியில் அருமையான குரலில் பஜனை செய்கிறார்கள்.  பார்க்க வேண்டிய ஒன்று.

மணிகர்ணிகா காட்:

இந்த படித்துறை மிகவும் பிரசித்தி பெற்றது.  ஒரு படித்துறையைப்பற்றி  மட்டும்  அவர் பாடி இருப்பது இதன் பெருமையை உணர்த்தும்.  இங்கே ஒருவருடையஉடல் எரிக்கப்படும் போது கால பைரவரே அவருக்கு உபதேசம் செய்து முக்தி அளிப்பதாக நம்பிக்கை.   நாங்கள் தை அமாவாசை இரவு அங்கே சென்றோம். சுமார் 12 பிணங்கள் அங்கே எரியூட்டப்பட்டுக்கொண்டிருந்தன.  நான் அருகில் சென்று பார்த்தேன். ஒரு சிறிது கூட நாற்றமே இல்லை. எல்லா உடல்களும்முழுமையாக எரியூட்டப் பட்டு சாம்பலாக்கப் பட்டிருந்தன.  அகோரி என்ற பெயரில் யாரும் பிணம் திண்பதையோ அல்லது உடல்கள் அரைகுறையாகஎரியூட்டப்பட்டு நதியில் வந்ததையோ நான் காணவே இல்லை. இல்லை. இல்லை.


வயிறே வைகுண்டம் :

வயிற்றை நம்பி அதற்காகவே வாழ்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள் ..  காசியில் அருமையான தமிழ் நாட்டு உணவு வகைகளை மிகவும் அன்புடன்பரிமாறும் இடங்களில் (எனக்குத் தெரிந்த) இரண்டினை உங்களுக்குச் சொல்கிறேன்.  முதலாவது, நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம் ('நாட் கோட் சத்தர்'என்று நாகரீமாக கூறும்படி கேட்டுகொள்ளப் படுகிறீர்கள்..) இரண்டாவது குமாரசுவாமி மடத்திற்கு எதிரே உள்ள உணவகம்.  வடஇந்திய கடுகு எண்ணெய்உணவு வகைகளிலிருந்து உங்கள் நாக்கு, வயிறு மற்றும் உயிர் ஆகியவற்றைக் காப்பாற்றும், பசிப்பிணி போக்கும் மருத்துவ மனைகள் இவை.. (பின்குறிப்பு:அந்தந்த ஊர்களில் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவு வகையே அந்த இடத்தில் வாழ சாலச் சிறந்தது என்பது ஸ்வாமிகள் வாக்கு.) காசியில் பசுக்கள்அதிகம் (??).  எனவே பால், நெய் பண்டங்கள் மிகவும் குறைந்த விலையிலும் நல்ல தரத்திலும் கிடைக்கிறது.

நிறைவும் தொடக்கமும்:

அலுவலகப் பணிகளால் ஒரு நாள் முன்னதாக தை அமாவாசை (திங்கள் அன்று) கிளம்ப வேண்டியதாயிற்று.  தை அமாவாசை அன்று 'மரணத்தை வெல்லும்முயற்சியில் வெற்றி பெற' மஹா ம்ருத்யுன்ஜெய ஹோமம் செய்யப்பட்டது.  கலந்துகொண்டது எங்கள் பெரும் பேறு.  பின்னர் 'அர்க்யம்' செய்ததுடன் அதுநிறைவு பெற்றது.  உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பதற்கு பிரசாத பொருட்கள் வாங்குவதுடன் நிறைவடைந்தது..    காசி விட்டு செல்லவும்,ஸ்வாமிஜியை விட்டு செல்லவும், சத்சங்கம் முதலியவற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டாததும் சிறிது வருத்தமாக இருந்தாலும் இந்த இனியநினைவுகளை மீண்டும் நினைப்பதின் மூலம் அது குறையப் பெற்றோம்.  பயணம் இனிதே நிறைவு பெறும் போது தான், ஸ்வாமிஜி பயணத்திற்கு முன்னர்அனுப்பிய, ஆதி சங்கரரின், காசி பஞ்சக சுலோகங்களின் பொருள் நினைவுக்கு வந்தது. 

1.  மனதில் (லௌகீக விஷயங்களைப்பற்றி) ஈடுபாட்டுக் குறைவும், நிம்மதியும், மணிகர்ணிகை என்ற தீர்த்த கரையும் வேறல்லவே!ஜ்ஞானமே பிரவாஹமாகவும், ஆத்ம சுத்தியே கங்கையாகவும் ஆத்ம ஸ்வரூபமே காசியாகவும் ஆக நானே காசிதானே

2.  இந்த்ர ஜால வித்தையைப் போன்று இந்த உலக விவகாரம் மனம் தோன்றிய படி தோற்றுவிக்கப் பட்டது தானே.  உண்மையில் சத், சித், ஆனந்தம் என்றுபரமாத்மா ஸ்வரூபமே ஆன ஆத்ம ஸ்வரூபமே அந்த காசியாக உள்ளது.  ஆகவே நானும் காசியும் ஒன்றேதான்.

3 .  ஐந்து கோசங்களில் மிளிரும் புத்தியே ஒவ்வொரு மனித தேஹமாகிய கோவிலில் விளங்கும் பார்வதீ தேவியானவள்.ஒவ்வொரு அந்தராத்மாவேசாக்ஷியான சிவன். ஆத்ம ஸ்வரூபமே காசி.

4 . காசி ஷேத்ரமேன்பது எனது சரீரமே.  எங்கும் பரவியுள்ள ஜ்ஞானமே கங்கை.  எனது பக்தியும் சிரத்தையுமே கயை.  பிரயாகக்ஷேத்ரம் என்பது எனதுகுருவின் சரணங்களை மனதில் தியானிக்கும் பேறுதான்.

5 . துரீயமான விச்வநாதர் யார்? அதுவும் ஒவ்வொரு மனதிலுரையும் ஸாக்ஷியான அந்தராத்மாதானே.. இவ்வாறு எனது சரீரத்திலேயே எல்லா தீர்த்தங்களும்இருக்கையில் வேறு புதிதாக தீர்த்தம் ஏது?

இப்படி இருக்க, உண்மையான காசியையும், கங்கையையும், மணிகர்ணிகையையும், பிரயாகையையும், கையையையும், விச்வநாதரையும்,  சிவனையும்,பார்வதியையும் எனக்குள்ளே தரிசிக்க, ஸ்வாமிஜி அவர்களால் அருளப்பட்ட இந்தப் பயணத்தை அதற்கான துவக்கமாகக் கருதுகிறேன்.

|| குருவே சரணம் ||

1 கருத்துக்கள்:

geethasmbsvm6 said...

அருமை. கேதார்கட்டில் தமிழ்நாட்டு மக்களைக்காணலாம். கோயிலும் திருப்பனந்தாள் காசிமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் அறிந்திருப்பீர்கள். பால் மிக அருமையாக இருக்கும். ஒரு பாவு பால் (கால் கிலோ) பதினைந்து ரூபாய்க்குள்ளாக இருக்கும், நன்கு சுண்டக் காய்ச்சி மேலே மலாய் போட்டு மு.ப, தூவிக் கொடுப்பார்கள். நாங்க போன சமயம் பத்து ரூபாய்க்குள் தான்.