Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, January 12, 2012

திரிகுண ரஹஸ்யம் - பகுதி 3


       முக்குணத்தில் எந்த குணத்தில் இருந்தால் நல்லது என ஆன்மீகத்தின் ஆரம்ப நிலை சாதகர்களுக்கு குழப்பம் ஏற்படுவது இயல்பு. சாத்வீகமாக இருக்கவேண்டும் என பலர் கூறுவார்கள்.

பாலும் பழமும் சாத்வீக உணவு என அதை மட்டும் உண்டு, பிற உணவு வகைகளை உண்ணாமல் காலம் கடத்துபவர்கள் உண்டு. 

குணங்களில் இது நல்லது அது கெட்டது என பிரிவு படுத்துவது கூடாது. அவ்வாறு பிரித்து ஆராய்வது ரஜோ குணத்தில் வரும். சாத்வீகமே சிறந்தது என கூறும் பட்சத்தில் நாம் ரஜோ குணத்தில் இருப்போம். 

இப்படி ஒரு குணத்திலிருந்து மற்ற குணத்திற்கு மாற்றம் அடைவது என்பது மனித இயல்பாகவே இருக்கிறது.

இறைவன் முக்குணத்தையும் ஒன்றிணைந்த நிர்குணமாக இருக்கிறான் என்றேன் அல்லவா? நாம் மூன்று குணங்களும் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் மூன்று குணங்களும் சம விகிதத்தில் இருந்தால் நல்லது என்பதே திரிகுண ரஹஸ்யம்.

(RGB) சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்கள் அனைத்து நிறங்களையும் உருவாக்குகிறது. இதில் அனைத்து நிறமும் முழுமையாக இருந்தால் தோன்றுவது வெண்மை. எந்த நிறமும் இல்லாமல் இருந்தால் தோன்றுவது கருமை.

அது போல முக்குணமும் முழுமையாக இருந்தால் வெண்மை என்ற ஒளி நிலைக்கும், முக்குணமும் விட்டு கருமை என்ற சூன்ய நிலைக்கும் செல்லுவதே சரியான வழிமுறையாக இருக்கும்.

முழுமையான குணம் நோக்கி செல்லவே பல ஆன்மீக வழிமுறைகள் போதிக்கிறது. உதாரணமாக ஒருவர் இறைவனின் நாமத்தை ஜபம் செய்கிறார் என்றால் அவர் மன அளவில் சாத்வீகமாகவும், தான் செய்கிறோம் என்ற நினைப்பில் ரஜோ குணத்திலும், ஒரே இடத்தில் அமர்ந்து செய்வதால் தமோ குணத்திலும் வெளிப்பாட்டு முழுமையை நோக்கி பயணிக்கிறார்.

இது போல ஒவ்வொரு ஆன்மீக பயிற்சியும் இம்மூன்று நிலைகளையும் முழுமையான தன்மையில் கலந்து இறை நிலையை நோக்கி நம்மை செலுத்துகிறது.

நம் ஆன்மா என்ற வாகனம் முக்குணம் என்ற மூன்று சக்கரங்களின் உதவியால் இறைவனை சென்று அடைகிறது என கொண்டால் மூன்று சக்கரங்களும் சமமான வேகத்தில் சுழல வேண்டும். இதில் ஏதேனும் ஒரு சக்கரம் மட்டும்ச் சுழன்றால் போதும் என ஒதுக்கிவிட முடியாது அல்லவா? அதுபோல முக்குணங்களையும் ஒன்றாக்க முயலுங்கள் சரிவிகித இணைவே உங்களை ஒளி பொருந்திய நிலைக்கு இட்டுச்செல்லும்.

கீழ்கண்ட படத்தை பாருங்கள் இவ்வளவு நேரம் நான் கூறியதை எளிமை படுத்தும் வரைபடம் இது. கோணத்தின் ஓரத்தில் இருக்கும் ஒவ்வொரு குணத்தின் தன்மை அதிகரிக்க கோணம் தன் நிலையை இழக்கும். இதுவே மூன்று கோணமும் சமமாகி கோணத்தின் மையத்தில் குணம் குவிக்கப்பட்டால் தெளிவு பிறக்கும். தெய்வீகம் ஒளிரும்.

இறைவன் பிரபஞ்சத்தில் முழுமையான நிர்குணமாகவும், அதே சமயம் குணமாக மாற்றமடைந்து வடிவமான திரிகுணத்தில் அமர்ந்ததை திருமூலர் தன் மந்திரத்தில் விளக்குகிறார். 

உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகில் எடுத்த சதாசிவன் தானே
                                                    - 1713

இவ்வாறு திரிகுணமாய் இருப்பதை எவ்வாறு ஒன்றிணைந்து இறைநிலை அடைவது என்பதையும் மற்றொரு திருமந்திரத்தில் சுட்டிக்காட்டுகிறார்.

பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
                                                                                     - 2406

திரிகுணத்தை பேச்சால் விளக்குவதைவிட நாம் உணர்ந்து வாழ்க்கை நிலையில் புரிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும். திரிகுணம் கடந்து நிர்குண நிலையை உணர இறையருளை வேண்டுவோம்.


- திரிகுண ரஹஸ்யம் முற்றியது 3/3 - 

11 கருத்துக்கள்:

திவாண்ணா said...

மூன்று குணங்களும் சமமாக நமக்கு இருப்பதில்லை. அப்படியானால் சமநிலையை கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?

geethasmbsvm6 said...

அவ்வாறு பிரித்து ஆராய்வது ரஜோ குணத்தில் வரும். சாத்வீகமே சிறந்தது என கூறும் பட்சத்தில் நாம் ரஜோ குணத்தில் இருப்போம். //

விளக்கம் அருமை ஐயா. இந்த விளக்கம் இன்று வரை கேட்டதில்லை.

geethasmbsvm6 said...

அதுபோல முக்குணங்களையும் ஒன்றாக்க முயலுங்கள் சரிவிகித இணைவே உங்களை ஒளி பொருந்திய நிலைக்கு இட்டுச்செல்லும்.//

அது எவ்விதம் இயலும்?? புரியலையே?

geethasmbsvm6 said...

திருமந்திரப் பொருளும் மிக அருமை. இதன் உள்ளார்ந்த பொருளை இன்னும் விளக்கி இருக்கலாமோ?

இராஜராஜேஸ்வரி said...

திரிகுணத்தை பேச்சால் விளக்குவதைவிட நாம் உணர்ந்து வாழ்க்கை நிலையில் புரிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும். திரிகுணம் கடந்து நிர்குண நிலையை உணர இறையருளை வேண்டுவோம்.

உணர்ந்திட இரையருள் துணை நிற்க பிரார்த்திப்போம்..

நிகழ்காலத்தில்... said...

பிளாக்ல திரிகுணம் சமநிலை இல்லை போல இருக்கு சாமி.,

6 மணி சுமாரும் ஒன்னுமேல ஒன்னு ஏறி தெரிஞ்சுது.,

இப்ப அப்கிரேடு டு ப்ரோ அப்படின்னு பின்னூட்டமிட்ட்வரின் பெயரில் தெரியுது.,

இல்ல ஒருவேளை எனக்குத்தான் திரிகுணமும் சமநிலை மாறிடுச்சா:)

சரி பார்த்து தெளிய வைங்கசாமி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.திவாஜி,

அதற்குதான் ஆன்மீக பயிற்சிகள் என நம் சான்றோர்கள் வழங்கி இருக்கிறார்கள். பக்தி,யோகம், வழிபாடு, சத்காரிய ஈடுபாடு என முன்னோர்கள் ஆய்ந்து வழங்கி உள்ளனர்.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி கீதாசாம்பசிவம்,

உங்கள் கேள்வியே திவாஜியும் கேட்டிருக்கிறார். பதில் முதலில் கூறிவிட்டேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இராஜராஜேஸ்வரி,
திரு நிகழ்காலம் சிவா,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

yrskbalu said...

திரிகுணம் கடந்து நிர்குண நிலையை உணர இறையருளை வேண்டுவோம்.

Anonymous said...

உதாரணமாக ஒருவர் இறைவனின் நாமத்தை ஜபம் செய்கிறார் என்றால் அவர் மன அளவில் சாத்வீகமாகவும், தான் செய்கிறோம் என்ற நினைப்பில் ரஜோ குணத்திலும், ஒரே இடத்தில் அமர்ந்து செய்வதால் தமோ குணத்திலும் வெளிப்பாட்டு முழுமையை நோக்கி பயணிக்கிறார்.///

அருமையான விளக்கம்..நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஓஷோ சொல்வார்..மனமற்ற நிலை அதாவது நிர்குணமான நிலை தானாகத்தான் நடக்கும்..அது நிகழ்வது...குணமே இல்லாமல் தவிர்க்க நினைப்பதே முக்குணத்தில் ஒரு குணம்தான்.