Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, October 16, 2011

கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!

முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது தான் சுப்பாண்டி திடீரென சம்பந்தமே இல்லாத கேள்விகளை எழுப்புவான். சுப்பாண்டியின் கேள்வியால் நிலை குலைந்து போவேன். சமாளித்து மீண்டும் வருவதற்குள் வேறு ஒரு கேள்வியை வீசுவான். இது சுப்பாண்டியின் இயல்பு.

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். மும்பைக்கு பயணமாக தயார் நிலையில் இருக்கும் பொழுது திருநெல்வேலி இருட்டுகடை அல்வா பற்றிய கேள்வி எழுப்புவான். உபநிஷத் பற்றிய வகுப்பில் டிவி சீரியலின் அடுத்த எப்பிசோடு என்ன ஆகும் என முகத்தை குழந்தை போல வைத்து கொண்டு விவாதிப்பான்.

ஒரு நாள் மாலை நேரத்தில் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். என் பின்னே பிரசன்னமான சுப்பாண்டி, “சாமி எனக்கு ஒரு சந்தேகம்..” என துவங்கினான் அன்றைய தொழிலை.

என்ன...? என்பது போல பார்த்தேன்.

“கால பைரவர்னா யாரு சாமி?”

“கால பைரவர்ன யாரு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி பைரவர்னா யார்ருனு தெரிஞ்சுக்க சுப்பு..” என்றவாரு தொடர்ந்தேன்.

“இறைவனோட முழுமையான நிலைக்கு பெயர் பைரவம். தொன்மையானவர் என்பது பொருள். வட மொழியில ‘வ’ என்கிற ஓசை பிரயோகம் அதிகமா இருக்காது. ‘வ’ இருக்கும் இடத்தில் எல்லாம் அவங்க ‘பா’ என்கிற ஓசையை பயன்படுத்துவாங்க.

வடையை அவங்க படானு சொல்லுவாங்க. வசந்தியை பசந்தினு சொல்லுவாங்க. அதுபோல வைரவன் என்பதை வடமொழியில் பைரவன்னு சொல்லுவாங்க. வைரம் என்றால் எது தொன்மையாக இருக்கிறதோ, மிகவும் திடமானது /இறுதியானது என்ற அர்த்தம் சொல்லலாம். பூமியில் இருக்கும் பொருட்கள் பூமி அடுக்குக்குகளின் அழுத்தத்தால் நிலக்கரியாகி பிறகு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வைரமாகிவிடும். வைர நிலைக்கு பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வேறு வடிவம் பெறாது. இதுவே இறுதி நிலை. அவ்வாறு இறைவனின் இறுதி நிலையாக வணங்கப்படுவது வைரவ ரூபம்.

இறைவன் முழுமையானவன், இறுதி உண்மையானவன் என்பதால் காசி மாநகரில் சில ஆன்மீக பாரம்பரியத்தை சார்ந்தவர்கள் இறைவனை வணங்குவார்கள்.காசி நகரமே இவர் தான் என்றும் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். தத்வமஸி எனும் மஹாவாக்கியத்தை உணரும் வகையில் இருக்கும் இறைவனின் சொரூபம் வைரவர்(பைரவர்). தமிழ் நாட்டில் வைரவன் கோவில் என்ற தலம் இவருக்காகவே இருக்கும் திருத்தலம். வட மாநிலங்களில் பைவரனுக்கு திருத்தலம் தனியே இருப்பது குறைவு. அகோரிகள் மற்றும் சில வகை ஆன்மீகவாதிகள் பைரவரை தங்களின் குருவாகவும், தாங்களே பைரவர்களாகவும் உணர்ந்து கொள்வார்கள்.

இறைவனின் ஆண் தன்மை பைரவன் என்றும் பெண் தன்மை பைரவி என்றும் கூறுவார்கள். இவர்கள் முழுமையான நிலையில் இருப்பதால் ஆடைகள் கொண்டு அலங்கரிக்க மாட்டார்கள். தங்களை பைரவர்களாக உணரும் அகோரிகளும் அதனால் தான் ஆடை அணிவதில்லை. எல்லா உயிரிலும் இறைவன் இயங்குகிறான் என்ற உணர்வில் விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரையும் சமமாக பாவிப்பார்கள்.

யோக பாரம்பரியத்தில் முதல் குரு பைரவர் ஆகும். அவர் தன் சிஷ்யை பைரவிக்கு முதல் முதலாக தியானத்தை கற்றுக்கொடுக்கிறார். ஒன்று இரண்டு தியான முறையல்ல... மொத்தம் நூற்றி பதினோரு வகை தியானத்தை கற்றுக்கொடுக்கிறார்.

அனைத்து தியானமும் இணைந்த நூலுக்கு விஞ்ஞான பைரவ தந்த்ரா என்று பெயர். இதுவே நம் நாட்டின் முதல் யோக நூலாகும்.

தந்திரீக முறை பயிற்சியிலும் ஆன்மீக உயர்நிலை பயிற்சியிலும் பைரவரே குருவாகவும் இறைவனாகவும் இருக்கிறார். முதலில் கோவில்களில் பைரவர் இல்லாமல் இருந்தது.

சில நூற்றாண்டுகளுக்கு பிறகு தாந்திரீக வழிபாட்டு முறையும் கோவில் சடங்குகளுக்குள் வரும்பொழுது பைரவருக்கு சன்னிதி ஏற்படுத்திவிட்டார்கள்.

எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையுங்கள் என்பதை குறிக்கும் அடையாளமாக பைரவருடன் நாய் இருப்பது போன்று விக்ரஹம் வைக்கப்பட்டிருக்கிறது.

நாய் எப்படி எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருக்கிறதோ அதுபோல கால விரையம் செய்யாமல்இறைநிலையை விழிப்புடன் இருந்து ஞானம் பெறவேண்டும் என்பதே கால

பைரவரின் உடன் இருக்கும் நாய் வடிவம் உணர்த்துகிறது. பைரவ தரிசனம் பெற்றவர்கள் அல்லது உபாசகர்கள் நாய்கள் புடைசூழ வலம் வருவார்கள். அல்லது நாய்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள். நாத பாரம்பரியம் என்ற ஆன்மீகவாதிகள் அனேகர் நாயுடன் இருப்பதை காணலாம். தத்தாத்ரேய பாரம்பரியம் என்பது நாத பாரம்பரியமே. அவ்வழி வருபவர்கள் நாயும் இவர்களும் வித்தியாசம் இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள். சீரடி சாய்பாபா மற்றும் யோகி ராம் சூரத் குமார் இவர்களை உதாரணமாக கூறலாம்.

சரியான குரு வழிகாட்டுதலுடன் மந்திர ஜபம் செய்யும் பொழுது கால பைரவ தரிசனம் பெறலாம். அவ்வாறு செய்யாமல் தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் சன்னிதியில் தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையும் ஒவ்வொருவனும் கால பைரவன் தான். காலத்தை வைரம் போல நிலைப்படுத்தி காலத்தை கடந்து என்றும் சாஸ்வதமாக இருப்பவன் கால பைரவன் தானே?

கால பைரவர் பல்வேறு ரூபத்தில் இருக்கிறார். சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், ஞான பைரவர், சஞ்சார பைரவர் என பல்வேறு நிலையை சொல்லுவார்கள்.”

என்று என்சைக்ளோபிடியா போல நீண்ட உரையாற்றிவிட்டு.. “ஏன் சுப்பாண்டி திடீர்னு இந்த கேள்வி- கால பைரவர் மேல அவ்வளவு பக்தியா?” என கேட்டேன்.

“இல்ல சாமி.. உங்கள பார்க்க வரும் போது ஒரு லாரியில் கால பைரவர் துணைனு எழுதி இருந்துச்சு.. அத்தான் சும்மா கேட்டேன்” என்றான் கூலாக.

சொன்ன மொத்த விஷயமும் வேஸ்டு என நினைத்துக் கொண்டேன்.
“சாமி நீங்க பேசின விஷயத்தில நேரம் போனதே தெரியல. பருங்க ராத்திரி பத்து மணி ஆயிடுச்சு நான் கிளம்பரேன் நாளைக்கு பார்ப்போம்” என கூறி தனது இருசக்கிர வாகனத்தில் பறந்தான் சுப்பாண்டி.

நானும் இரவு பணிகளை முடித்து படுக்கை தயார் செய்து படுத்தேன். திடீரென வீட்டுக்கு வெளியே காலடியோசை கேட்டது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். யாரோ வீட்டுக்குள் வாசல் கேட்டின் வழியே எகிறி குதித்துக் கொண்டிருந்தார்கள்.

டார்ச்சுடன் கதவை திறந்து “யாரு அது..?” என கேட்டு டார்ச் வெளிச்சம் பாய்ச்சினேன்.நடுங்கியபடி சுப்பாண்டி நின்று கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சு சுப்பு ? என்ன பிரச்சனை” என கேட்டேன்.

“சாமி காலபைரவர் தரிசனம் கிடைச்சுடுச்சு சாமி....” என கூறி ஓவென அழுதான்.

“என்னப்பா சொல்ற? அழுவாம சொல்லு”...

சில நிமிடத்திற்கு பிறகு கூறத் தொடங்கினான்.

“சாமி...உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பினேனா... ரெண்டு தெரு தாண்டிருக்க மாட்டேன் தெருநாய் எல்லாம் ஒன்னுகூடி என்னை தொரத்த ஆரம்பிச்சுடுச்சு.. நானும் வண்டியை ஸ்பீடா ஓட்டினா அதுங்களும் என் ஸ்பீடுக்கு கூடவே வருந்துங்க. என்னதான் நாய் பைரவர்னு நீங்க சொன்னாலும் அதுங்க அப்படி ஓடிவந்தா என்னோட அடிவயித்துல ஒரு கிலிவருது சாமி... நானும் பல தெரு ஓட்டி தப்பிச்சிருலாம்னு பார்த்தேன். ம்ஹூம் அதுங்களும் விடுறதா இல்லை. அதுல ஒரு கருப்பு பைரவர் சாமி.

பார்க்கவே படுபயங்கரமா கடவா பல்லு தெரிய என்னை தொரத்துச்சு.... அதுவும் என் கெண்டக்கால பார்த்து விடாம தொரத்துச்சு சாமி.. அப்பத்தான் புரிஞ்சுது இது சாதாரண பைரவர் இல்ல கால பைரவர்னு.. அப்பத்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்துச்சு பைரவர்ல கால பாத்து வர பைரவர் தானே சாமி கால பைரவர்....?”

இவனை வைத்துக் கொண்டு இப்படியாக செல்லுகிறது என் வாழ்க்கை....!

15 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

வைரவன் படிக்கனும் என்று தானே இது ? அவரு தான் சுப்பாண்டியா ?

:)

அறிவில்லாதவன் said...

கால பைரவரை எண்ணற்ற கதைகள் உண்டு. எது கதை எது கட்டுக்கதை என்பதை பிரித்தறிய முடியாத அளவுக்கு . நான் முழுச் சாப்பாடு எதிர்பார்த்தேன். நீங்க பிரசாதம் மட்டும் கொடுத்து முடிச்சிடிங்களே சாமி.

Pattarai Pandi said...

சுப்புவையும் நாய் தொரத்தி இருக்கே!! சுப்பு, கவனிக்க :)

மதி said...

>>>இவனை வைத்துக் கொண்டு இப்படியாக செல்லுகிறது என் வாழ்க்கை....!<<<

ஐயோ பாவம் சாமீ...

(கால) பைரவர பத்தி இன்னும் நிறைய பகிர்ந்துகொள்ளலாமே...

Sanjai said...

பைரவர் - டூ ஸ்மார்ட் :)

vanila said...

சுவாமி, தளை தட்டுற மாதிரி தெரியுதே.. மஹா பெரியவர் அவர்கள் அழகான ஒரு விஷயம் சொல்லியிருப்பார்கள். நாம் தமிழன் என்பதைத்தான் திராவிடன் என்று வடநாட்டவர்கள் சொல்லுகின்றார்கள்.. நாம் "தவகம்" என்பதை அவர்கள் "திராவகம்" என்கிறார்கள், நாம் மண்டோதரி அன்பதை அவர்கள் வண்டோதரி என்பார்கள், (அதனால் 'மி' விற்கு பதில் 'வி', 'ழ' என்ற எழுத்து தமிழ் மொழிக்கே உரியது அதனால் 'ழ' அங்கே 'ட'.. அதுவே இங்கான தமிழ் அங்கு திராவிடமானதென்று. அதுவும் போல நாம் பரோடா என்று குறிப்பிடுவதை அவர்கள் வதோதரா என்றே சொல்லுகின்றார்கள், எழுத்து வடிவிலும் கூட. # சந்தேகம்.

subramanian said...

ஸ்வாமிஜி,
வணக்கம். பதிவுகள் மிகவும் அருமை.
சுப்பாண்டியின் கேள்விகளும் பதில்களும் வயிறு வலிக்க சிரிப்பை உண்டாக்கும்
அதே வேளையில் சிந்தனைக்கு விருந்தான பல புதிய தகவல்கள் ஒவ்வொரு
முறையும் கிடைப்பது எங்கள் அதிர்ஷ்டமே...

திரு. பட்டறை பாண்டி அவர்களுக்கு,

இந்த இடுகையின் பாணியிலேயே சொல்வதானால் இந்த சுப்பாண்டியும்
நான்கைந்து கால பைரவர்களின் தரிசனம் கிடைக்கப் பெற்று அடி வயிற்றில் ஒரு
கிலி ஏற்பட்டது உண்மைதான் (ப்ராண வித்யா வகுப்பு முடிந்த அன்று இரவு
ஊருக்கு திரும்புகையில்). ஆனால் வியப்பின் உச்சமாக நான் துரத்தப்படவில்லை.
பைரவர்கள்தான் எனக்குச் சில அடிகள் தூரத்தில் நெருங்கிய போது கலைந்து எதிர்
திசையில் ஒடி விட்டார்கள். குருவருளாலேயே அன்று இந்த சுப்பாண்டி காக்கப்
பெற்றேன்.

குறிப்பு: 'சுப்பாண்டி' யின் பெயரில் சுப்புவின் பெயர் மட்டுமல்லாது தங்களின் பெயரும் ('பாண்டி')
இடம் பெற்று இருப்பதை நகைச்சுவையோடு கவனிக்க வேண்டுகிறேன். ;)

- அன்புடன்,
மு. சுப்பிரமணியன் (மதுரை).

Anonymous said...

சுவாமி பிரசாதம் பத்தவில்லை

Pattarai Pandi said...

சுப்பு, கவனித்தது ரொம்ப கரெக்ட்!!

சுவாமியை சுத்தி நிறைய சுப்'பாண்டிகள் இருகிறார்கள் போல :)

திவாண்ணா said...

>>>இவனை வைத்துக் கொண்டு இப்படியாக செல்லுகிறது என் வாழ்க்கை....!<<<
நீர் கொடுத்து வைத்தவர் ஸ்வாமி!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கந்தன்,
திரு கோவி.கண்ணன்,
திரு அருள்,

உங்கள் கருத்துக்கள் வருகைக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அறிவில் ஆதவன்,

// நீங்க பிரசாதம் மட்டும் கொடுத்து முடிச்சிடிங்களே சாமி.//

முதலில் பிரசாதம் பிறகே பிற சாதம்.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி வெண்ணிலா,

மஹா பெரியவர் சொன்னதை கேள்விபட்டதில்லை.

அனால் வா - பா என்பதில் வேறுபாடு இருப்பதை மட்டுமே நான் சுட்டுக்கிறேன்.

நாம் ’வ’ங்காளம் என்றால் அவர்கள் ’ப’ங்களம் (பங்களா) என்பார்கள்.

இதில் தளை மட்டுமல்ல எதுவும் தட்டுவதில்லை :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பிரமணியன் மற்றும் பட்டரைபாண்டி,

சுப்பாண்டி என்ற பட்டத்திற்கு இரண்டு பேரும் அடித்துக்கொள்ளக்கூடாது. கேட்டால் இருவருக்கும் அப்பட்டம் கொடுப்பேன் :))

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ரங்கன் said...

அய்யா வணக்கம்

நாய் பூனை முதலிய விலங்குகள் நம்முடைய பிராண சக்தியை
இழுக்க வல்லவை என்று கேள்விப் பட்டுள்ளேன். அது உண்மையா
என்று அறிய ஆவல். தங்கள் ஏதேனும் கூறமுடியுமா ?