Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, October 12, 2011

தேவ பிரசன்னம் - பகுதி 8

கடவுளுடன் நேரடியாக மனிதன் உரையாட தேவப்பிரசன்னம் ஓர் வழி என முன்பு கூறினேன். இறைவனே நேரடியாக கோவில் எத்தகைய சூழல் அமைக்க வேண்டும் என சொல்லுவது மிகவும் சிறப்பல்லவா? தமிழக கோவில்களில் ஆகம சாஸ்திரம் என்று கோவில் நிர்மாணம் செய்யும் சட்டம் உண்டு. இச்சாஸ்திரம் தற்சமய தமிழக கோவில்களில் 30 சதவீதம் கூட கடைபிடிப்பார்கள் என உறுதியாக சொல்ல முடியாது.

கேரள கோவில்களில் ஆகமம் வேலை செய்யாது. பரசுராமரின் வழி வந்தவர்கள் மந்திர, தந்திர பாதைகளில் செல்வதால் அவர்கள் ஜோதிட சாஸ்திரத்தை தேவப்பிரசன்னம் என்ற முறையில் பயன்படுத்துகிறார்கள். தேவப்பிரசன்னம் என்பதே ஒரு தாந்ரீக முறை தான்.

தாந்த்ரீக முறைகளில் எப்பொழுதும் ஒரு குறை இருக்கும். சராசரி மனிதன் உண்மையான தாந்த்ரீகரை கண்டாலும் போலியானவரை கண்டாலும் அவனுக்கு வித்தியாசம் தெரியாது. நம் ஆட்களுக்கு மோடி மஸ்தானும் தாந்த்ரீகன் தான், செய்வினை செய்பவனும் தாந்த்ரீகன் தான்- இவர்கள் இருவருமே தாந்த்ரீகர்கள் இல்லை என்பதே நமக்கு தெரியாது.

இதுபோலவே கோவிலில் பிரசன்னம் பார்ப்பவர்கள் எல்லோரையும் நாம் தேவப்பிரசன்னம் பார்ப்பவர்கள் என முடிவு செய்கிறோம்.

சபரி மலை மற்றும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் நடந்த பிரசன்னம் உண்மையா?

டிசம்பர் மாதம் சென்னையில் சங்கீத சீசன் நடைபெறும். அப்பொழுது பிரபலமாகாத சில பாடகர்கள் சபாக்களுக்கு தாங்களே காசு கொடுத்து அல்லது சிபாரிசு மூலம் கச்சேரி செய்வார்கள். இதனால் தங்களுக்கு புகழ் வெளிச்சம் கிட்டும் என்பது அவர்களின் எண்ணம். அப்படி செய்தாலும் திறமை இருப்பவனையே உலகம் பேசும். திறமையற்றவனை அத்தருணத்தில் பேசும் அப்புறம் உலகம் மறந்துவிடும்.

அதுபோலத்தான் சிலர் சிபாரிசின் பேரிலும், பணம் மூலமும் இக்கோவில்களில் பிரசன்னம் பார்த்தார்கள். அனைத்தும் வீணானது. கோவில் நிர்வாகத்தின் கோளாரால் வந்த வினை. தேவனுக்கு பிரசன்னம் பார்க்கச் சொன்னால் ஜெயமாலாவிற்கு பிரசன்னம் பார்க்கிறார்கள் நம் ஜோதிட மேதைகள்.ஒரு மாநில முதல்வருக்கு ஜோதிடம் பார்த்தவர் என்பதற்காக அவருக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும் அறிவு வந்துவிடுமா? கோவிலின் பெயரும், ஜோதிடரின் பெயரும் கெட்டது தான் மிச்சம். திருவனந்த புரத்திலும் கோவில்காரர்களின் முடிவே அங்கே தேவப்பிரசன்ன பலனாக கூறப்படுகிறது. நமக்கு தேவனா முக்கியம்? புதையல் தானே முக்கியம்...!

இவர்கள் செய்யும் தவறுகள் நீண்டு கொண்டே செல்லுகிறது... முடிவு இறைவனின் கையில்...

கேரளாவில் இன்றளவும் பல்வேறு இடங்களில் தேவப்பிரசன்னம் சிறப்பாக செயல்படுகிறது. பிரபலமான கோவில் என்றால் குருவாயூரை உதாரணமாக கூறலாம். அங்கே தேவப்பிரசன்னம் வைக்கப்பட்டால் அப்பலன்களை சொல்ல ஒரு திருமண மண்டபத்தை எடுத்து அதில் ஐநூறுக்கும் மேம்பட்ட ஜோதிடர்கள் கலந்து ஆலோசிப்பார்கள். நன்றாக ஜோதிடம் தெரிந்த ஆட்கள் அங்கே இருந்தாலே தலை வெடித்துவிடும். ஒவ்வொருவரும் சாஸ்திரத்தை கரும்பு சக்கை பிழிவதை போல பிழிந்து எடுப்பார்கள். இப்படி பட்ட நிகழ்வுகளை பார்த்து பழகி பங்கெடுத்தவர்களுக்கு தேவப்பிரசன்னம் என்ற பெயரில் போலியாக செய்பவர்களை கண்டால் என்ன தோன்றும்?

நம் சாஸ்திரங்களை இன்றும் நாம் இழந்துவிடவில்லை. வரும் காலத்தில் நம் சந்ததியினருக்கு வழங்க நாம் ஒரு சதவிகிதமேனும் முயல வேண்டும்.

ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்பில் தேவப்பிரசன்னம் மூலம் கோவிலின் ஆற்றலை மேம்படுத்தும் செயல் செய்துவருகிறோம். நீங்கள் சார்ந்த கோவில்களுக்கு ஏதேனும் தேவப்பிரசன்னம் மூலம் உதவி வேண்டுமானால் தொடர்புகொள்ளுங்கள். இறையாணையாக ஏற்று உதவுகிறோம்.

-பிரசன்னாகியது-

15 கருத்துக்கள்:

திவாண்ணா said...

அரசின் பிடியிலே அகப்பட்டு.... இன்னைக்கு தமிழ்நாடு கோவில்களைப்பத்தி நினைச்சா... ஏன் ஸ்வாமி அந்த கொடுமை?? கோவில்களுக்கு போகவே பிடிக்கலை. பேசாம வீட்டிலேயே பூஜை ஹோமங்கள்.... போதும்.

Sivakumar said...

ஸ்வாமி,

பத்மநாப ஸ்வாமி கோவிலில் நடந்தது பிரசன்னம் இல்லையா? ஏன் கடவுளின் விருப்பமும் நிர்வாகத்தினர் விருப்பமும் ஒன்றாக இருந்திருக்கக் கூடாது?

Sanjai said...

அருமை ...

Ilangovan Sivalingam said...

என்னை பொறுத்தவரை தேவபிரசன்னம் என்பதே ஒரு கண்கட்டு வித்தைதான் அதை யார், எவ்வளவு சாஸ்த்திரரீதியாக செய்தாலும் சரி. பலநூறு வருடங்களுக்குமுன் சராசரி மனிதர்கள் அறிவு தெளிவு பெறாத காலத்தில், விஞ்ஞானம் என்ற சொல்லே இல்லாத காலத்தில், சில வர்க்கத்தினர் அல்லது சில இனத்தினர் தங்கள் வயிற்று பிழைப்புக்காக மக்களின் அறியாமையை பயன்படுத்தி, மூளைச்சலவை செய்து ஏற்படுத்திய மூடப்பழக்கங்களில் இதுவும் ஒன்று. ஒரு கலையோ, கல்வியோ, வித்தையோ பொதுவில் வைக்கபடாமல், பொதுவில் போதிக்கபடாமல் இருந்தால் நிச்சியம் அது ஒரு ஏமாற்று கலை அல்லது ஏமாற்று வித்தைதான். இந்த ஏமாற்று வித்தைக்கு நாம் அனைவரும் அடிமைகளாகிவிட்டோம். Drug addict may be excused but superstition adict should be heavily punished.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.இளங்கோவன் சிவலிங்கம்,

உங்களை போன்று அறிவியல் அறிந்து மூடப்பழக்கமே இல்லாமல் தெளிவான அறிவுடன் இருப்பவர்களை கண்டு மெய்சிலிர்க்கிறேன்.

//பலநூறு வருடங்களுக்குமுன் சராசரி மனிதர்கள் அறிவு தெளிவு பெறாத காலத்தில், விஞ்ஞானம் என்ற சொல்லே இல்லாத காலத்தில்//

இந்திய விஞ்ஞானிகள் முதலில் அனுப்பிய செயற்கைகோளுக்கும் அடுத்த செயற்கைகோளுக்கும் என்ன பெயர் வைத்தார்கள் தெரியுமா?

அந்த பெயர் கொண்டவர்கள் வாழ்ந்த நூற்றாண்டு எது தெரியுமா? அவர்கள் கண்டறிந்த விஷயம் என்ன தெரியுமா?

மேலைநாட்டினர் அறிவியல் என கூறி வெளியிடும் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு அறிவுப்பூர்வமாக பேசுகிறோம் என நினைத்துக்கொண்டு இருக்கும் உங்களை போன்றவர்களை நினைத்து வருந்துகிறேன்.

தேவப்பிரசனம் என்றால் என்ன என்றும் அது நடக்கும் இடத்திற்கு ஒரு முறை சென்று பார்க்காமலும் முன் முடிவுடன் அதை மறுதலிப்பது தான் மூடநம்பிக்கை நண்பரே...!

பகூத் அறிவுடன் செயல்படுவதை விட ஆய்ந்து பகுத்தறிவுடன் செயல்படுவதே நன்றி.

உங்களின் கருத்துக்கு நன்றி.

தேடல் said...

அய்யா ,
தங்களின் தேவ பிரசன்னம் கட்டுரை முழுவது படித்தேன் ,
நன்றாக உள்ளது

//கேரள கோவில்களில் ஆகமம் வேலை செய்யாது//

ஆகமம் என்றால் என்ன ?

நன்றி
நந்தகுமார்

Ilangovan Sivalingam said...

ஸ்வாமிஜி அவர்கள் என் கருத்தை மதித்து பதில் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. சுயமுற்ச்சியால், சுயஉழைப்பால் ஆரம்பிக்கபட்ட ஒரு நிறுவனத்துக்கு முன்னோர் பெயரை வைப்பதால் அதற்க்கு அவர்தான் காரணம் என்று கூறிவிடமுடியாது, அது ஒரு நினைவுகொள்ளல், அஞ்சலி அவ்வளவுதான்.தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைப்பது பெருமைப்படுத்தவே ஒழிய பொருத்தமான் பெயர் என்பதற்க்காக அல்ல.
அடுத்து ஒரு விசயத்தை பற்றி முழுமையாக தெரியாமல் பேசுவது தவறுதான், அதற்க்காக வருத்தம் தெரிவித்துகொள்கிறேன். ஆனால் அந்த 'வித்தைகளை' நானும் தெரிந்து கொள்ள, கற்றுகொள்ள ஆசைபடுகிறேன், அதோடு வேதங்கள், மந்திரங்கள் கற்று கொள்ள ஆசைபடுகிறேன். பூணூல் அணியாத இந்த சூத்திரனுக்கு எந்த பள்ளியில் கற்றுத்தருவார்கள் என்று தெரிந்தால் மிகவும் நன்றி உடைவனாக இருப்பேன் அல்லது தந்திரியாகவோ, அர்ச்சகராகவோ என்ன தகுதி வேண்டும் என்பதையாவது தெரிந்து கொள்ள விரும்பிகிறேன்.. என் கூற்றில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

geethasmbsvm6 said...

பூணூல் அணியாத இந்த சூத்திரனுக்கு எந்த பள்ளியில் கற்றுத்தருவார்கள் என்று தெரிந்தால் மிகவும் நன்றி உடைவனாக இருப்பேன் அல்லது தந்திரியாகவோ, அர்ச்சகராகவோ என்ன தகுதி வேண்டும் என்பதையாவது தெரிந்து கொள்ள விரும்பிகிறேன்.. என் கூற்றில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.//

தமிழ்நாட்டிலே இதற்கெனக் கல்விச் சாலைகள் இருக்கின்றன. கடுமையான சட்டதிட்டங்கள் உண்டு முன்பெல்லாம். இப்போத் தெரியாது.

geethasmbsvm6 said...

ஸ்வாமிஜி, தெளிவாகக் கூறி வருகிறீர்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களைப் போன்றவர்கள் இவற்றை எல்லாம் ஒரு பிரசாரமாகவும் செய்யலாம். அல்லது வொர்க்‌ஷாப் போல் நடத்திப் புரியவைக்கலாம். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தேடல்,

ஆகமம் என்றால் என்ன என இணையத்தில் தேடி பாருங்கள் அல்லது தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களில் உள்ள புத்தக விற்பனை நிலையத்தில் கிடைக்கும் வாங்கி படித்துப்பாருங்கள்.

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு இளங்கோவன் சிவலிங்கம்,

// பூணூல் அணியாத இந்த சூத்திரனுக்கு எந்த பள்ளியில் கற்றுத்தருவார்கள் என்று தெரிந்தால் மிகவும் நன்றி உடைவனாக இருப்பேன் அல்லது தந்திரியாகவோ, அர்ச்சகராகவோ என்ன தகுதி வேண்டும் என்பதையாவது தெரிந்து கொள்ள விரும்பிகிறேன்//

சூத்த்ரா என்றாலே கயிறு என்று பொருள். அதனால் பூணூல் அணிந்தவனே சூத்திரன் என்பது உங்களுக்கு தெரியுமா? இதை மேலும் விளக்கினால் ஜாதி கலவரம் தான் வரும்.

ப்ரணவ பீட அறக்கட்டளை ஜாதி - மத கொள்கைகளை கடந்தது. இங்கே மந்திர சாஸ்திரம், யந்திர சாஸ்திரம், வேதகாலை சாஸ்திரங்கள் அனைத்தும் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கிறோம்.

அவர்களின் ஜாதி பிண்ணனி மற்றும் மதப்பிண்ணனி ஆராய்வதில்லை.
கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும்.

நீங்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் என்று வந்தாலும் கற்றுக்கொடுக்க நாங்கள் காத்திருக்கிறோம்.

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி கீதா சாம்பசிவம்,

இறையருள் அனுமதித்தால் கண்டிப்பாக இக்கருத்தை முன்னெடுப்பேன்.

மிக்க நன்றி

Ilangovan Sivalingam said...

ஸ்வாமிஜி அவர்களுக்கு மிகவும் நன்றி. It's a useful info given by you. நான் அறிந்த வரையில் சூத்திரர்களுக்கு விளக்கம் வேறு மாதிரியாகத்தான் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது அல்லது நான் படித்தது தவறான வேதமாக (!) இருக்கலாம், தங்களுடைய புதிய விளக்கத்திற்க்கு நன்றி.என்னுடைய கேள்வி அதை முழுமையாக கற்றுகொண்டால்,என்னையும் தாந்திரிகராகவோ, அர்ச்சகராகவோ ஏற்றுகொள்வார்களா, என்னையும் சாஸ்திர சட்ங்குகள், பூஜை, புனஸ்காரம் செய்ய அனுமதிப்பார்களா? அதற்கு என்ன தகுதி வேண்டும். விதண்டாவாதத்திற்கு கேட்பதாக தயவு செய்து என்ன வேண்டாம். நடைமுறையில் படித்ததை, பார்பதை, நடப்பதை வைத்து கேட்கிறேன். The question is not to hurting, just to clear my doubts only.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு இளங்கோவன் சிவலிங்கம்,

வாதம் செய்ய வேண்டுமானால் இருவரும் சம அளவு அறிவுடன் இருக்க வேண்டும். நான் உங்களின் அறியாமையுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவே..!

// அதை முழுமையாக கற்றுகொண்டால்,என்னையும் தாந்திரிகராகவோ, அர்ச்சகராகவோ ஏற்றுகொள்வார்களா, என்னையும் சாஸ்திர சட்ங்குகள், பூஜை, புனஸ்காரம் செய்ய அனுமதிப்பார்களா? அதற்கு என்ன தகுதி வேண்டும்//

சாஸ்திரத்தை முழுமையாக கற்றுக்கொண்டால் பூஜை சடங்குகள் இவற்றை செய்ய மாட்டீர்கள் :)

வேத சாஸ்திரத்தில் எந்த இடத்திலும் பூஜையோ, வர்ண வித்தியாசமோ கொடுக்கப்படவில்லை. யாரோ எதிலோ சொன்னதை வைத்துக்கொண்டு ஆராய்வதை விட உண்மையை தெரிந்துகொள்ள முயலுங்கள். நான் கூறும் பதிலை விட உங்கள் கேள்விக்கு உங்களுக்கே விடை கிடைக்கும்.

மிக்க நன்றி

Invest Trust said...

@Ilangovan Sivalingam said...
என்னை பொறுத்தவரை தேவபிரசன்னம் என்பதே ஒரு கண்கட்டு வித்தைதான் அதை யார், எவ்வளவு ..... அறிவு தெளிவு பெறாத காலத்தில், விஞ்ஞானம் என்ற சொல்லே இல்லாத காலத்தில், சில வர்க்கத்தினர் அல்லது சில இனத்தினர் தங்கள் வயிற்று பிழைப்புக்காக மக்களின் அறியாமையை பயன்படுத்தி, ........... ஒரு கலையோ, கல்வியோ, வித்தையோ பொதுவில் வைக்கபடாமல், பொதுவில் போதிக்கபடாமல் இருந்தால் நிச்சியம் அது ஒரு ஏமாற்று கலை அல்லது ஏமாற்று வித்தைதான். இந்த ஏமாற்று வித்தைக்கு நாம் அனைவரும் அடிமைகளாகிவிட்டோம். Drug addict may// தகுதியானவர்களுக்கு மட்டுமே உபதேசிக்கத் தக்கதால், இதை பொதுவில் வைக்கவில்லை. இதற்கு உதாரணம், இன்றய லியோனியின் பட்டிமன்றத்தில் வரும் ஒரு தகவல் இதற்கு ஈடுகொடுக்கும்: மருத்துவரகளுடன் மருத்துவம் படிப்பவர்களும் கிராமத்திற்கு செல்லும் போது மருத்துவ மாணவிக்கு காலில் சுளுக்கு எற்படுகிறது. உடனே மருத்துவர்கள் கிராமத்தில் என்ன செய்வது என அறியாமல் நிற்க, ஒரு வயதான் மூதாட்டி பெண்ணை கூப்பிட்டு சுளுக்கை சரி செய்கிறாள். உடனே எல்லேரும் அது எப்படி, எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள் என கேட்க, அதற்கு மூதாட்டி இதெல்லாம் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தால் இதை வைத்து காசு பண்ணிவிடுவீர்கள். இது மனித குலத்தின் நன்மைக்காகவே தவிர காசு பண்ண அல்ல என்கிறாள். எனவே தகுதியானவர்களிடம் தான் நல்ல கலைகள் சேரவேண்டும். எல்லேரிடமும் சேரின் அது மரியாதை இழக்கும். அதனாலே தகுதியானவர்களுக்கு மட்டுமே சில விஷயங்கள் உபதேசிக்கப்பட்டது.