மந்திர சக்தி
- முதிர்வு பெற்ற அதிர்வு.
வேதத்தில் மந்திர சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. நடைமுறையில் மந்திரசாஸ்திரம் என்றால் தீய விளைவுகளுக்கு பயன்படும் விஷயமாக எண்ணுகிறார்கள். மந்திர சாஸ்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நிலையை அடையலாம். யோக சாஸ்திரம் பரமாத்மாவை அடையும் பல வழிகளை கூறுகிறது. ஹத, ஞான, கர்ம , பக்தி மற்றும் மந்திர யோகம் எனும் ஐந்து பாதைகளைக் கொண்டு ஆன்ம தரிசனம் அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது. யோக சாஸ்திரத்தில் மந்திர யோகம் ஓர் அங்கம் என்பதின் மூலம் மந்திர சாஸ்திரத்தின் உயர்வை உணரலாம்.
அறியாமை கொண்ட மனதுடன் ஆராய்ந்தால் ஓர் எளிய வார்த்தைக்கு என்ன சக்தி இருக்க முடியும் என எண்ணத் தோன்றும். உண்மையில் மந்திரத்தின் வார்த்தையைக் காட்டிலும் அதை பயன்படுத்தும் விதம் [ப்ரயோகம்] மற்றும் பயிற்சியே [சாதனா] முக்கியம்.
மந்திர உச்சாடனம் செய்யும் பொழுது நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் சலனம் ஏற்படுகிறது. பிரபஞ்ச ஆற்றலில் சில விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சலனம் முடிவில் நாம் அடையவேண்டிய இலக்கை அடைகிறது.
மந்திர ஜெபம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் சலனத்தை தெளிவாக்குகிறது. கலங்கலான நீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு நாணயத்தை இடும்பொழுது அனைத்து தூசும் அந்த நாணயம் இருக்கும் இடத்தை அடையும். நீர் தெளிவடையும். எப்பொழுதும் சலனம் கொண்ட நீர் போன்ற மனதில் மந்திர ஜெபம் செய்யும் பொழுது எண்ண அலைகள் மந்திரத்துடன் அடங்கி மனம் தெளிவடையும்.
ஞான யோகிகள் மந்திர ஜெபத்தை ஆதரிப்பதில்லை. ஆத்ம விசாரம் செய்வதை விட்டு மந்திர ஜெபம் செய்வதால் என்ன பலன்? என்பது அவர்களின் கருத்து. மனம் ஒடுங்கியதும், மனதின் மூலத்தைக் காண்பதே மந்திர ஜெபத்தின் நோக்கம். ஞான விசாரத்தின் நோக்கமும் இதுவே. அதனால் தான் யோக முறையில் ஜெபயோகம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜெபம் என்றால் தொடர்ந்து உச்சரிப்பது என பொருள்படும். ஜெபம் மற்றும் அஜெபம் என இரு தன்மைகளை கொண்டது, மந்திரஜெபம். தூய்மையான மனதுடன் மந்திரத்தை உச்சரிப்பது மந்திர ஜெபம் எனப்படும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்த பின்பு வேறு நடவடிக்கைகள் செய்யும் பொழுது நம்மை அறியாமல் மனம் ஜெபம் செய்து கொண்டிருக்கும். இது அஜெபம். அதாவது சமஸ்கிருத சொல்லான அஜெபம் ஜெபிக்காத ஜெபம் என மொழி பெயர்க்கலாம். உலகில் உள்ள அனைத்து மதத்திலும் மந்திர ஜெபம் உண்டு என்பது இதன் சிறப்பை பறைசாற்றும். எனவே மந்திர ஜெபம் சமயங்கள் கடந்த இறைநிலை காட்டும் கருவி எனலாம்.
என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?
வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள். இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.
பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம். பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. "பீஜ" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். "ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.
தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.
பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு. மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.
மந்திரத்தை தவறாக உச்சரிக்க முடியுமா? என உங்களுக்கு சந்தேகம் வரலாம். இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர். பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?" என கேட்டவுடன் "நித்ய தேவத்துவம் " என்று கேட்பதற்கு பதிலாக "நித்ர தேவத்துவம்" என தவறுதலாக கூறினான். இது போன்று தவறுதலாக உச்சரித்ததால் இறவா வரம் பெறுவதற்கு பதிலாக தூங்கும் வரத்தைப் பெற்றான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.
மேலும் ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார். தானே ஒரு மந்திரத்தை ஜெபம் செய்தால் அது சித்தி அளிக்குமா எனதெரியாமலேயே ஜெபம் செய்ய வேண்டிவரும். அது எப்படி மந்திரம் ஒரு மனிதனுக்கு பயன்படுவது மற்றொருவருக்கு பயன்படாமல் போகும். எல்லோருமே மனிதர்கள் தானே என உங்களுக்கு ஓர் சந்தேகம் வரலாம்.
அதை அடுத்த பதிவில் பார்ப்போமா?
(தொடரும் )
9 கருத்துக்கள்:
I wish you wrote these articles in English! My son, unfortunately, is not fluent in Tamil. I want him to read these articles that describes scientific approach to our rituals. Had someone provided these details when I was growing up, I would have been a better man today for sure. May be someday, I'll get a chance to grasp your writings and translate in English. Thanks for your service to our society - particularly youngsters who may have maturity to read and grasp these concepts, without ridiculing and without the fear of being ridiculed.
ஆர்வத்தைத் தூண்டும் பதிவு.நன்றி ஸ்வாமிஜி.
நன்றிகள் பல ஸ்வாமி....
திரு ராம் ரவிஷங்கர்.
உங்கள் ஆங்கில பின்னூட்டத்திறகு நான் தமிழில் பதில் அளிக்க விரும்புக்கிறேன்.
உங்கள் மகனை போன்ற எத்தனையோ பேர் பயனடைய ஆங்கிலத்தில் எழுத சொல்லுகிறீர்கள். நல்ல ஆலோசனை. ஆனால் நமது சாஸ்திரங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பிளாட்பாரங்களில் விற்கப்படுவதை பார்க்கும் பொழுது சங்கடமாக இருக்கிறது.
விஞ்ஞான பைரவ தந்த்ரா எனும் யோகத்தை பற்றி கூறும் புத்தகத்தை ஒரு வெளிநாட்டுகாரர் கையில் வைத்து படித்துக்கொண்டிருந்தார். மறுகையில் மது கோப்பை.
எனது எண்ணங்களும் சாஸ்திரமும் தவறான கைகளில் சிக்க கூடாது என்பது எனது எண்ணம்.
”குண்டலினி” எனும் ஒரு வார்த்தை இப்பொழுது பணம் சம்பாதித்து கொடுக்கும் வார்த்தையாகி விட்டது. யோக சாஸ்திரத்தை போக சாஸ்திரமாக்கும் இத்தகைய செயலுக்கு வெளிநாட்டினருக்கு இந்த புத்தகம் சென்றது தான் காரணம்.
முதலில் உங்கள் மகனை தமிழ் அல்லது பாரத மொழி ஏதாவது படிக்க சொல்லுங்கள். பின்பு சடங்குகளை தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் எனது கருத்துக்களை மொழிபெயர்க்க விருப்பம் தெரிவித்திருந்தீர்கள். நல்லது. ஆனால் எனது கருத்துக்கள் மேல்நாட்டினருக்கு அவ்வளவு விருப்பம் இருக்காது. காரணம் எனது கருத்துக்கள் நிதர்சனமானது.
உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் ஆதரவு எனக்கு உற்சாகம் ஊட்டுகிறது.
திரு ஷண்முகப்ரியன்.
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு மகேஷ்,
எனக்கு எதற்கு நன்றி?
உங்கள் வருகைக்கு நன்றி.
சூஃபி முறைகளில் ஒன்றான ”முரீது” கிட்டத்தட்ட இதே போன்ற வழிமுறையை ஒத்தது.அவர்களுக்கு குரான் சூராக்கள். இங்கே வேத மந்திரங்கள். ஞானிகள் உலகில் எங்கே தோன்றி இருந்தாலும் ஒரே போல்தான் சிந்திப்பார்கள் என்ற எளிய உண்மை இதில் இருந்து விளங்குகின்றது.
ஆளுக்கு ஏற்ற மந்திரம் - இதை நான் பல இடங்களில் கேட்டிருக்கேன்/படித்தும் இருக்கேன்.
காஞ்சி பெரியவரே மந்திரத்தின் மகிமை தனது தெய்வத்தின் குரலில் பல இடங்களில் சொல்லியுள்ளார்.
Very clear and good article explaining the veda mantharams benefits.
Post a Comment