Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, January 9, 2010

சர்வரோக நிவாரணம் = சர்வலோக பாஷாணம்..!


அன்பு சாமிக்கு,

உங்களுடன் இருக்கும் சுப்பாண்டி எழுதிக்கொள்வது.
சிலவிஷயங்களை உங்களுடன் நேரில் பேச முடியாது என்பதால் இந்த மின்னஞ்சல்.

முதலில் இந்த லிங்கைப் படிக்கவும்.

சர்வரோக நிவாரணம் லிங்க் - [ உலக நலன் கருதி லிக் சென்சார் செய்யப்பட்டுள்ளது ]
படிச்சாச்சா???

ஒ.கே இப்ப டீலிங் ஸ்டார்ட்.

நீங்க என்னைய பெரிய எழுத்தாளர் ஆக்கிட்டீங்கனா, நானும் இதுமாதிரி உங்களைப்பற்றி எழுதுவேன்ல?? ...
யோசிங்க சாமி!!

நீங்களும் என் வாழ்க்கையில் அதிசயம் செஞ்சீங்கனு பலர் கிட்ட போயி சொன்னா நாலு காசி சம்பாதிக்கலாம்.

ஸ்வாமி ஓம்கார் ஆசிர்வதிச்சதால குருடனுக்கு காது கேட்கிறது, ஊமைக்கு கண் தெரிகிறது, முடவனுக்கு பாடும் ஆற்றல் கிடைத்தது என
கட்டுரை எழுதலாம்.

குருடனுக்கு காது கேட்கும் என்றும்,ஊமைக்கு கண் தெரியும் - இதில் அதிசய வெங்காயம் ஒன்னும் இல்லைங்கிறது படிக்கிற சுவாரசியத்தில் தெரியாது. ஹாப்பாயில் ஆசாமிங்க நம்பிடுவாங்க.

லிங்கம் எடுப்பது, விபூதி வரவழைப்பது ஓல்டு பேசன் ஸ்வாமி. நாமும் இது போல புதிதாக முயற்சி செய்வோம்.
என்னைப் பெரிய எழுத்தாளராக்க நீங்க வரம் தந்து ஆசிர்வதமெல்லாம் பண்ண வேண்டாம்.

அப்பப்ப எனக்கு சம்திங் வெட்டினாலே போதும் :)


அளவில்லா எதிர்பார்ப்புடன்,

சுப்பாண்டி

---------------------------------------------------------------------------------------------

அளவில்லா எதிர்பார்ப்பு கொண்ட சுப்பாண்டிக்கு,

ஒரு கதை... :)

வங்காள இளவரசி ஒருவர் விவேகானந்தரிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என கேட்டாளாம்.
அதற்கு விவேகானந்தர், எதற்கம்மா இப்படி ஒரு விருப்பம் உங்களுக்கு என கேட்டார்.

உங்களை போன்ற அழகும் அறிவும் கொண்ட குழந்தை வேண்டும் அதனால் தான் விருப்பப்படுகிறேன் என்றாளாம் இளவரசி.


நானும் நீங்களும் திருமணம் செய்துகொண்டால் அழகும் அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் என நிச்சயம் கிடையாது. சில நேரங்களில் குழந்தை வேறு மாதிரியும் பிறக்கலாம்.

குழந்தை கருவுற்று பெற்று எடுப்பதற்கு கால தாமதமும் ஆகும். அதனால் என்னையே உங்கள்
மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா என கூறிய விவேகானந்தர் இளவரசியில் காலில் விழுந்தார்.

இப்போ கருத்து... :)

உங்களை பெரிய எழுத்தாளர் ஆக்கி அப்புறம் என்னை பற்றிய அதிசங்களை நீங்கள் எழுதி சம்பாதிப்பதை விட... அனைத்து நோய்க்கும் ஒரே மருந்தாக சர்வரோக நிவாரணியானந்தாவை பற்றி நீங்கள் எழுத துவங்கினாலேயே உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

உடனே இலக்கியத்தில் பழுத்தப் பழத்தின் ’ஜூஸ்’ என்ற புனைபெயரில் எழுதி சம்திங் பார்க்கவும்.


அதிசயத்தை மக்கள் எதிர்பார்க்கும் வரை இவர்கள் போன்றவர்கள் இருந்தே தீருவார்கள். ப்ரதிபக்‌ஷ பாவனையில் கூறவேண்டுமானால்
இவர்கள் இருப்பதாலேயே பிறர் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது நமக்கு தெரியும்.

என் சார்ப்பாக அவரிடம் சென்று ஒரு வரம் கேளுங்கள்... அது என்னவென்றால்..

“கடவுளே... வரம் கொடுப்பதை நிறுத்தி வாழக் கற்றுக்கொடு..!”


தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்

Thursday, January 7, 2010

காசி சுவாசி - பகுதி 5

குருதே கங்காஸாகர கமநம்
வ்ரதபரிபாலன மதவா தானம் மி
ஜ்ஞானவிஹீந:ஸர்வமதே ந
முக்திம் ந பஜதி ஜன்மசதேந

கங்கையிலும், பல சமுத்திரங்களிலும் குளித்தாலும், பல விரதங்கள் மற்றும் தான தர்மங்கள் செய்தாலும் தன் ஆன்மீக வழி எப்படிப்பட்டது என உணராதவன் என்றும் முக்தி அடைவதில்லை.

-பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர்
---------------------------------------------------------

பாரத தேசத்தை பாரத மாதாவாக நினைத்தால் அவளின் தனங்களில் வரும் வற்றாத பால் போன்றது கங்கை நதி. கங்கைக்கு பலர் பலவாறு புனிதம் கொண்டதாக கருதுகிறார்கள். நாராயணரின் கால்களில் இருந்து வருகிறது. பிரம்மனின் கைகளில் உள்ள கலசத்திலிருந்து வருகிறது. இன்னும் சிலரோ சிவனின் தலையிலிருந்து வருகிறது என்கிறார்கள்.


கங்கை எங்கிருந்து வருகிறது என்பது முக்கியமல்ல கங்கை என்ற நதியில் என்ன வருகிறது என்பதே முக்கியம். நீர் என்பது உற்பத்திக்கான ஒரு வஸ்து. அதனால் நீர் பெண்ணாக கருதப்படுகிறது. அதனாலேயே இந்தியாவில் இருக்கும் நீராதாரங்களுக்கு பெண் பெயர்கள் வைக்கப்படுகிறது. நிலையான இயற்கை தன்மைக்கு ஆண் பெயரும், இயற்கையை வளப்படுத்தும் தன்மைக்கு பெண் பெயரும் வைப்பது பாரத கலாச்சாரமாகும்.

கங்கை என்பது பெண்ணாக உருவகப்படுத்தியதன் விளைவு, சிலர் சிவனுக்கு கங்கை இரண்டாவது மனைவி என துவங்கிவிட்டார்கள். விநாயகர், முருகன் சிவனின் புதல்வர்கள், பார்வதி முதல் மனைவி என தனக்கு என்ன உண்டோ அதை கடவுளிடமும் காண்கிறார்கள். நம் ஆட்கள் விட்டால் சிவனின் குடுப்பத்திற்கு ரேஷன் கார்டு கூட கைலாய முகவரியில் கொடுப்பார்கள்.

கங்கையில் குளித்தால் பாவம் தொலையும் என்பது பலரின் நம்பிக்கை. இக்கருத்தை பலர் தவறாகவே புரிந்துகொள்வார்கள். நம் ஆட்கள் தம்பதிகளாக கங்கையில் குளித்துவிட்டு அவசர அவசரமாக தங்கள் துணையை பார்ப்பார்கள். பாவம் தொலைந்ததா என பார்க்கிறார்களாம். :) நம் ஆட்களின் கிண்டலுக்கு அளவே இல்லையே..

பல காலமாக கூறப்படும் கிராமத்து கதைகள் கங்கையில் குளிப்பதன் உண்மையான தத்துவங்களை போதிக்கிறது. ஒரு முறை சிவனும் பார்வதியும் தனிமையில் இருக்கும் பொழுது பார்வதி சிவனிடம், “கங்கையில் குளிப்பதால் முக்தி என கூறுகிறீர்களே ஸ்வாமி, தினமும் ஆயிரக் கணக்கானவர்கள் அதில் நீராடினாலும் சிலர் மட்டுமே முக்தி அடைகிறார்களே? இது முரண்பாடாக இருக்கிறதே?” என கேட்டார்.

“சக்தியே இதை விளக்குவதை விட நேரடியாகவே காண்பிக்கிறேன் என்னுடன் வா” என கங்கைக்கரைக்கு அழைத்துச் சென்றார் சிவன்.

இருவரும் மிகவும் வயது முதிர்ந்த முதியவர்கள் போல உருமற்றம் அடைந்தார்கள். பார்வதிக்கு தன் நாடகத்தின் திரைக்கதையை கூறினார் சிவன்.

நடக்க இயலாத முதியவர்கள் போல கங்கை கரையில் அமர்ந்து கொண்டார்கள். கங்கையில் குளித்துவிட்டு
வருபவர்களிடம், “ஐயா, புண்ணியவான்களே... எங்களால் நடக்க முடியாது, அதனால் கங்கையில் குளிக்க முடியவில்லை. தயவு செய்து நீங்கள் பெற்ற புண்ணியங்களை எங்களுக்கு கொடுத்திவிட்டு செல்லுங்கள். ஐயா உதவுங்கள் ஐயா...” என கேட்கத் துவங்கினார்கள்.

யாரும் முதிய தம்பதிகளுக்கு உதவ முன்வரவில்லை. நேரம் கூடிக்கொண்டே சென்றது யாரும் உதவவில்லை. ஒரு இளைஞன் குளித்துவிட்டு வந்து தனது கையில் இருந்த குடம் மூலம் இருவர் கையிலும் கங்கையை ஊற்றினான். பின் அந்த இளைஞன் கூறினான், “முதியவர்களே இதோ என் புண்ணியங்கள் எல்லாம் உங்களுக்கு தருகிறேன்.”

முதியவர் வேடத்தில் இருந்த சிவன் கேட்டார்,” இளைஞனே உனக்கு புண்ணியம் வேண்டாமா?”

“ஐயா கங்கை என்ற புனிதம் இங்கே பிரவாகமாக ஓடுகிறது. என் புண்ணியம் தீர்ந்தால் என்ன? மீண்டும் இதில் குளித்தால் புண்ணியம்
கிடைத்துவிடும்” என்றான் இளைஞன்.

முதிய வேடத்தில் இருந்த சிவனும் பார்வதியும் தங்களின் சுய உருவை காட்டி அவனுக்கு முக்தியை அளித்தார்கள்.

கங்கையில் குளித்தால் புண்ணியம் பெருகும்
என்ற சித்தாந்தத்தை காட்டிலும்,

கண்டிப்பாக புண்ணியம் பெருகும் என்ற நம்பிக்கை அதைவிட பெரியது.


கங்கை மாசுமடுகிறது. அதை தூய்மையாக்குகிறோம் என்று பல கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என்கிறார்கள்.அரசியல்வாதிகளோ ஐயாயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்கிறார்கள். கங்கைக்கா இல்லை இவர்களுக்கா யாருக்கு ஒதுக்க சொல்லுகிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது. சில பகுத்த-அறிவு-வாதிகள் கங்கை அசுத்தமானது என்கிறார்கள்.

கங்கை அசுத்தம் எனும் மேன்மக்களே, காசி நகரம் தோன்றி ஐயாயிரம் வருடம் ஆகிவிட்டது. பல நூற்றாண்டுகளாக ஓடும் கங்கை,
இன்றும் கங்கையாகவே இருக்கிறது. ஆனால் நீங்கள் வசிக்கும் சிங்கார சென்னை என்ற பெருநகரம் தோன்றி முன்னூறு வருடங்களே நிறைவடைந்து இருக்கிறது. படகு போக்குவரத்து இருந்த கூவம் என்ற ஆற்றில் தற்சமயம் உங்களால் குளிக்க முடியுமா?

தமிழகத்தின் தலைநகரில் ஓடும் புண்ணிய நதி

கூவத்தில் அறுபது வருடத்திற்கு முன் தினமும் குளித்து அதில் பூஜைக்கு நீர் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. முதலில்
உங்கள் காலடியில் இருக்கும் ஆற்றின் லட்சணத்தை பாருங்கள். அதை சுத்திகரிக்க முயலுங்கள்.

கூவத்தை சுத்திகரிக்க பல கோடி ரூபாயை ’வாழும் கடவுளிடம்’ கேட்கிறார்கள். உண்மையில் கூவத்தை சீரமைப்பது என்பது ஆறு மாதத்தில் சில லட்சங்களில் செய்து முடிக்க வேண்டிய விஷயம்.

கேரளா போன்ற மேற்கில் இருக்கும் நில அமைப்பின்படி கடல் நீர், நகரத்தில் உள் புகுந்து கடல் நீரின் அடர்த்தியால் கழிவுகள் தேங்காத நீர் ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. அதுபோல கூவ நதியை ஒட்டி உள்ள கடல் பகுதியை ஆழப்படுத்தினால் கடல் நீர் கூவ நீருடன் கலந்து அடர்த்தியின் காரணமாக கழிவுகள் கடலில் கலந்துவிடும். கடல் நீர் கூவம் நதியின் உள்ளே கலப்பதால் படகு போக்குவரத்து செய்ய ஏதுவாக இருக்கும்.

கொச்சின் நகரம் இதற்கு சிறந்த உதாரணம். ஆனால் இந்த எளிய முயற்சி யாரும் செய்ய மாட்டார்கள். செய்தால் பல கோடி கிடைக்காதே? கூவம் உண்மையாக எங்கே ஓடுகிறது என புரிகிறதா?


கைலாஷ் மானசரோவர் என்பது பலர் புனிதமாக மதிக்கும் இடம். சிவனின் உறைவிடம் என கூறப்படுகிறது. உலகின் உயரமான இடத்தில் இருக்கும் மிகப்பெரிய ஏரி மானசரோவர். ஆனால் இந்த ஏரியை புனிதமாக கருதினாலும் யாரும் வீட்டுக்கு தீர்த்தமாக எடுத்து வருவதில்லை....!

காசிக்கு செல்லுபவர்கள் கங்கையை தங்களுடன் எடுத்து வருகிறார்கள். பல காலம் தங்களுடன் வைத்து பூஜிக்கிறார்கள்.

உரக்க
சொல்லுகிறேன் கேளுங்கள். மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் கங்கை மாசுபடுவது என்பது சாத்தியம் இல்லை. இன்னும் பல நூற்றாண்டுகள், பலகோடி தொழில்சாலைகள் வந்துவிட்டாலும், பல கழிவுகள் மிதந்தாலும், பிணங்கள் அழுகினாலும் காங்கை மாசுபடாது. இது நிச்சயம்...!

இக்கருத்தை பக்தியால் உணர முற்படுவதை விட, நம் பகுத்தறிவுக்கு புரிந்துகொள்ள நாம் கொஞ்சம் அறிவியலின் உதவியை நாட வேண்டும்.

நான் அறிவியல் என்றவுடனேயே, “அறிவியலை எல்லாம் நீ எப்படி பேசலாம்?” எனக் கேட்கும் நண்பர்களே தயாராக இருங்கள். உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது...!

[...சுவாசிப்பேன்]

Monday, January 4, 2010

காசி சுவாசி - பகுதி 4

கோசேஷு பஞ்சஸ்வதிராஜமானா
புத்திர்பவானீ ப்ரதிதேஹ கேஹம் மி
ஸாக்ஷூ சிவ:ஸர்வகதோந்தராத்மா
ஸா காசிகாஹம் நிஜ போத ரூபா மிமி

ஐந்து விதமான உடல்களில் ஒளியாக வீசுவதும், மனித உடல் என்ற கோவிலில் வீற்றிருக்கும் அறிவு வடிவமானவள் பார்வதி தேவி. அந்த மனித உடலில் ஆன்மாவாக வீற்றிருப்பவரே சிவன். அந்த ஆன்மாவின் உண்மையான புறத்தோற்றமே காசி நகரம்...!

-ஆதிசங்கரர் - காசி பஞ்சகம்
-------------------------------------------------------------------------------------

ஆதி சங்கரர் - இந்த பெயர் பாரத தேசத்தில் மிகவும் அதிகமாக ஒலித்த இடம் ஒரு நகரம் மட்டுமே. அந்த நகரம் காசி. ஆதி சங்கரர் எப்பொழுது வாழ்ந்தார், எப்படி வாழ்ந்தார் என பல கதைகள் கூறப்பட்டிருக்கிறது. அவை நமக்கு தேவையில்லை. எப்பொழுதும் ஞானிகள், மகான்களின் கதைகள் மனதுக்கு சில உற்சாகத்தை கொடுக்கும். ஆனால் இவை நம் ஞானவழிக்கு இட்டு செல்லாது. ஒரு கல்லூரி மாணவனுக்கும் பேராசிரியனுக்கும் இடையே நடக்கும் உரையாடலை மட்டும் கேட்டு நாம் பட்டம் வாங்கிவிட முடியுமா? சில நேரங்களில் மட்டுமே ஞானியர் சரிதங்கள் படிப்பினையாக இருக்கக்கூடும்.

ஆதிசங்கரரின் சரிதம் என கூறப்படும் சங்கர விஜயம் பல அற்புதங்களை இணைத்து எழுதப்பட்டது. ஆதிசங்கரரின் நிதர்சனமான வாழ்க்கை வரலாறு தொகுக்கபட்டதா என்பது கேள்விக்குறியே. ஆனால் காசி மாநகரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்கலைகழகங்களை கொண்ட கல்வி நகரமாக இருந்தது. அதனால் ஆதிசங்கரின் வாழ்க்கை சம்பவங்கள் அங்கே பதியப்பட்டு தெளிவாக இருக்கிறது.

பாரத தேசத்தின் ஆன்மீகவாதிகளில் தவிர்க்க முடியாதவர் ஆதிசங்கரர். ஆன்மீகவாதிகள், சன்யாசிகள் என பாரதத்தில் 60% ஆன்மீக மையங்கள் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஆதிசங்கரின் பின்பற்றுதலை செய்கிறது. பிற 40% ஆதிசங்கரரின் கருத்தை மேம்படுத்து செய்கிறோம் என செயல்படுகிறது. இதை கொண்டு பார்க்கும் பொழுது ஆதிசங்கரரை தவிர்த்துவிட்டு ஆன்மீக பாதை பாரத தேசத்தில் இல்லை என்ற நிலையை உணர முடியும்.

கவிஞர், சீர்திருத்தவாதி, ஆன்மீக தலைவர், மத ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டி, தத்துவ ஞானி என பல வடிவங்களில் ஆதிசங்கரரை பார்க்க முடியும். ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, விஷ்ணு சகஸ்ர நாமம் என பல நூல்களுக்கு விளக்க உரை கொடுத்துள்ளார். அது போக பல நூல்கள், கடவுளை பற்றிய பாடல்கள் என எழுதி இருக்கிறார். இறைவனின் முக்கிய ஆறு வடிவங்களான சிவன், விஷ்ணும், சக்தி, ஸுப்ரமணியர், விநாயகர் மற்றும் சூரியன் என அனைத்துக்கும் பாடல் இயற்றி உள்ளார். உருவ வடிவம் கடந்த அருவ இறைநிலைக்கும் இவரின் பாடல்கள் உண்டு.

ஆதிசங்கரர் பாரத தேசம் முழுவதும் ஐந்து முறை வலம் வந்திருக்கிறார். நான்கு திசையிலும் ஆச்சாரிய மடங்கள் நிறுவினார் என்று ஆதிசங்கர விஜயம் என்ற சரிதத்தில் கூறப்படுகிறது. பல நகரை கண்டவராக இருந்தாலும் காசி என்ற நகரை பற்றி மட்டுமே பாடல் இயற்றி உள்ளார் ஆதிசங்கரர்.

ஆதிசங்கரர் காசி நகரை தன் உடலாக கருதி தானே இறைவனுடன் ஒன்றாக கலந்து வாழ்ந்த இடம் காசி. காசியே சிவன், நானே காசி என அவர் கூறும் பாடல்களில் அவரின் ஆன்மீக நிலை பளிச்சிடுகிறது. காசி நகரை மட்டுமல்ல, காசிக்கு அழகு சேர்க்கும் கங்கையை பற்றியும், மணிகர்ணிக்கா என்ற படித்துறையை பற்றியும் அவர் பாடல் இயற்றி உள்ளார் என்றால் அவருக்கு காசி எவ்வளவு பிடித்த நகரமாக இருந்திருக்கும்?

காசியில் சர்வயங்ஞ பீடம் என்ற உயர் கல்வி பதவி இருந்தது. அதில் அமர தங்களில் அறிவாற்றலை நிரூபணம் செய்ய வேண்டும். 64 கலைகளிலும் தாங்கள் மிகவும் உண்ணத நிலையில் இருக்கவேண்டும். பல்வேறு அறிஞர்களின் சிக்கலான கேள்விக்கு பதில் கூற வேண்டும். இவற்றை செய்து நிரந்தர சர்வயங்ஞபீடாதிபதியாக இருந்தார் ஆதிசங்கரர்.

இந்த பீடத்தில் ஒருவர்
இருந்தால் உலகின் ஞானம் சார்ந்த விஷயங்களின் ஒரே தலைவர் என அர்த்தம். அத்வைத்தம் என்ற ஆதிசங்கரரின் கொள்கை பாரத தேசத்தில் புகழ்பெற்ற நேரம் அது. தனது தர்க்க திறமையாலும், இறையருளாலும் அத்வைத்த கொள்கையை நிறுவி வந்தார் ஆதிசங்கரர். ஆனாலும் அத்வைத்தம் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கபட்டது அல்ல. ஆதிசங்கரர் அத்வைத்தகொள்கையை பரப்பும் ஓர் கருவியாக இருந்தார்.

ஒருவர் பிரபலம் அடைந்தாலே அவரை பின்பற்ற பலர் கூடிவிடுவதும், பிரபலத்தின் மேல் இருக்கும் அன்பால் அவருக்கு நன்மை செய்கிறேன் பேர்வழி என அவரின் பெயரை கெடுப்பதும் இயல்பு. அப்படித்தான் ஆதிசங்கரருக்கும் நடந்தது. ஆதிசங்கரரின் வளர்ச்சியால் பலர் அவருக்கு சிஷ்யர்களாக அமைந்தனர். புகழ் பரவ பரவ சாமான்யர்கள் சந்திக்கும் நிலையில் ஆதிசங்கரரின் நிலைமாற்றம் ஏற்பட்டு அறிஞர்கள் மற்றும் சான்றோர்களை மட்டுமே பார்க்கும் நிலை அடைந்தது.

ஆதிசங்கரரின் கருத்துக்கள் சாமனிய மனிதனை சென்றடையாமல் போகக்கூடும் என்பதாலும், ஜாதி,மதம் போன்ற வகுப்புவாத பிரிவுகளில் அவரின் கருத்துக்கள் சிக்கிவிடக்கூடாது என நினைத்தார் ஒரு ஞானி.

ஆதிசங்கரர் மற்றும் அவரை சார்ந்தவர்கள் நித்திய அனுஷ்டானங்கள் மற்றும் அறிவுசார்ந்த கூட்டமாக இருந்தார்கள். காசியில் இருந்த ஞானியோ தன்னிலை மறந்து குளிக்க, உடுக்க என தூய்மையற்றவராக இருந்தார். ஒருவிதத்தில் அகோரி போன்ற வாழ்க்கைச் சூழல்.

ஆதி சங்கரர் குளிக்க சென்ற படித்துறை வீதி.

ஒரு முறை ஆதிசங்கரர் கங்கை படித்துறைக்கு குளிக்க செல்லும் பொழுது வழியில் இவர் படுத்திருந்தார். அவரை சுற்றி நாய்கள் இருந்தன. நாய்களுக்கு கொஞ்சம் உணவையும், அதே கைகளில் மறு பாதியில் தானும் உண்டு மகிழ்ந்தார் அந்த ஞானி.

ஆதிசங்கரர் வி.ஐ.பி அல்லவா? அவர் வரும் முன் அவரின் சீடன் வழிவிடுங்கள் வழிவிடுங்கள் என எல்லோரையும் விலக்கிவிட்ட வண்ணம் வந்துகொண்டிருந்தான். அங்கே நாய்களுடன் இருந்த ஞானியை பார்த்தான். அவனுக்கு ஞானி என தெரியவில்லை. விலகு விலகு கூறினான்.


அந்த ஞானி கேட்டார் எதை விலக சொல்லுகிறாய்? என் உடலையா? என் ஆன்மாவையா என ஆழ்ந்த ஞான கருத்துக்களை கேட்டு சிஷ்யனை நிலைகுலைய செய்தார். தன் குரு கூறும் கருத்துக்களை நாயுடன் உலாவும் இவர் எப்படி கூறுகிறார் என அதிர்ந்தான். அந்த ஞானியுடன் உறையாடியதை மனீஷபஞ்சகம் என்ற நூலாக தொகுத்தார் ஆதிசங்கரர்.

சிலர் இந்த ஞானியை பன்றி மேய்க்கும் புலையன் என கூறுவார்கள். ஆதிசங்கரர் மேல்ஜாதிக்கரர் என்றும் புலையன் கீழ்ஜாதி என்றும் பாகுபடுத்தி பார்க்கும் நிலை அவர்கள் கூறும் கதைகளில் தெரியும். உண்மையில் காசியில் பன்றி, நாய் மேய்க்கும் புலையர்கள் என்ற ஒரு இனமே கிடையாது. சிலர் சிவனே அவ்வுருவில் வந்தார் என கூறுவார்கள். இவையாவும் ஆதிசங்கரரின் கதைகளில் மிகைப்படுத்தபட்ட விஷயங்களே ஆகும்.

காலபைரவர் பற்றி சென்ற பகுதியில் கூறினேன் அல்லவா? அவரை தவிர வேறு யார் நாய்களுடன் காசியில் உலாவர முடியும்? ஆணவம் மிகும் இடங்களில் எல்லாம் இடி போல வந்து இறங்கும் ஆற்றல் காலபைரவனுக்கு தானே உண்டு...!

இந்த நிகழ்வுக்கு பிறகு காலபைரவனின் ஆற்றல் ஆதிசங்கரருக்கு கடத்தப்பட்டது. அவரும் மனிதனின் அறியாமை மற்றும் ஆணவங்கள் கண்டபொழுது எல்லாம் கொதித்தார்.

ஒரு நாள் காசி நகர வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்
ஆதிசங்கரர். அங்கே வேத சாஸ்திரத்தில் வரும் ஒரு வார்த்தையான “டுக்ருஞ்கரணே” என்ற சொல்லை ஒருவன் மனப்பாடம் செய்ய திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். சில குழந்தைகள் தேர்வுக்கு மனப்பாடம் செய்வதை பார்த்திருக்கிறீர்களா? மஹாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு..... மஹாத்மா காந்தி.. மஹாத்மா காந்தி...என ஒரு வார்த்தையையே உடைந்த ரெக்கார்டு போல கூறுவார்கள். அது போல காசிவீதியில் ஒருவன் “டுக்ருஞ்கரணே” என மனப்பாடம் செய்துவந்தான்.

வேதத்தை பிறர் முன் கூறி பெருமை கொள்ளுவதற்கு மட்டுமே அவன் படித்துவந்தான் என்பதை உணர்ந்து அவனை நோக்கி ஆதிசங்கரர் பாடிய பாடல் தான் பஜகோவிந்தம் என்ற மோஹமுத்கரம்.

இறைவனை பாடு, இறைவனை பாடு..முட்டாளே..! இறைவனை பாடு.
எமன் உன் உயிரை எடுக்க வரும் பொழுது “டுக்ருஞ்கரணே”
என கூறினால் உன்னை விட்டுவிடமாட்டான்.
இறைவனின் நாமமே உன்னை இறப்பற்ற முக்தி நிலைக்கு கொண்டு செல்லும்.

-என பொருள்பட பாடினார் ஆதிசங்கரர். மோஹமுத்கரம் என்றால் மோகத்தை தகர்க்கும் அயுதம்(சுத்தியல்) என்று பெயர். அதில் இருக்கும் ஒவ்வொரு வரிகள் மிகவும் அற்புதமானது. எனக்கு தெரிந்தவரை ஆதிசங்கரரும், சிவவாக்கியரும் தான் அறியாமையில் இருப்பவர்களை காண்டு கொதித்து முட்டாளே என திட்டி பாடி இருக்கிறார்கள்.

சரி உங்களிடம் ஒரு கேள்வி...


மிகவும் பழுத்து தானே வெடித்த பலாபழத்தின் தங்க நிற பலாச்சுளைகளை, மலைத்தேனில் ஊறவைத்து , அருவியின் அழகை ரசித்தவண்ணம் அருகில் அமர்ந்து சாப்பிட்டது உண்டா?

அவ்வாறு ரசிக்க வேண்டுமானால் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தை, தெய்வீக பாடகி எம்.எஸ் சுப்புலக்‌ஷிமியின் குரலில் கேட்கவேண்டும்..!

சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை எழுந்துகொள்ளுங்கள். கண்களை மூடி உங்கள் சுவாசத்தை சில நிமிடம் ஒரு சாட்சியாக கவனியுங்கள். பிறகு ஒரு கப் தேனிருடன் இந்த வீடியோவை ரசியுங்கள்.



பாடலின் பொருளே தேவையில்லை... எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அந்த பக்தி ரசத்தை பாருங்கள். புனரபி ஜனனம் என்ற வரிவரும் பொழுது தன்னை மறந்து ஆன்மாவில் உறைகிறார். நான் சொன்ன மலைத்தேனும் பலாபழமும் ஞாபகம் வரும்.

காசி, இசை என்ற இருவார்த்தைகளை கேட்டாலே எனக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் ஞாபகம் வருவார். விஸ்வநாதர் கோவிலில் இளம் வயது முதல் சிவனையே செனாய் மூலம் உருகவைத்தவர். சரஸ்வதி மற்றும் சிவனை பற்றி பேசுகிறார் என்பதற்காக காசியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்பு இவரை மதத்தை விட்டு விலக்கி வைத்தது. இசைக்கு மதம் இடையாது. நான் இசைக்கும் பொழுது என் முன்னால் சில உருவங்கள் தெரிகிறது அதைபற்றியே நான் பேசினேன். இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கிறார்.

இசை வெள்ளத்தில் மூழ்கி திளைத்தால் ஒழிய இத்தனை ஞானம் கிடைக்காது. ஆனால் சிலர் கங்கையில் குளித்தால் ஞானம் கிடைக்கும் என்கிறார்கள். என்னது... கங்கையா..?

அது மாசுபட்டு இருக்கிறதே அதில் பல கழிவுகள் மிதக்கிறதே அதில் குளித்தால் புண்ணியமோ ஞானமோ கிடைக்குமா? என நீங்கள் கேட்பது புரிகிறது.


சுத்தமான தண்ணீரை மட்டுமே குடிக்கும் மாமனிதர்களே... கங்கையில் குளித்துவிட்டல்ல.....சிறிது குடித்துவிட்டே உங்கள் கேள்விக்கு பதில் கூறுகிறேன். பொருத்திருங்கள்...!

(சுவாசிப்பேன்)

Sunday, January 3, 2010

தினம் தினம் திருமந்திரம் - புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

ஜனவரி ஒன்றாம் தேதி இறைவனின் செயல் நிலையும் சமாதி நிலையும் இணந்த ஆருத்ர தரிசனம் அன்று தினம் தினம் திருமந்திரம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.



மாலை 6 மணிக்கு ப்ரணவ பீட பஜன் குழுவினரின் பக்தி இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.



சிறிய ப்ரார்த்தனைக்கு பிறகு தினம் தினம் திருமந்திரம் புத்தகம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


புத்தகத்தின் அச்சுப்பணியை சிறப்பாக செய்த வடகரை வேலன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார். வடகரைவேலன் அவர்கள் புத்தகம் அச்சிடும் பொழுது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.



ஆருத்ரா தரிசனம் தினத்தின் முக்கியத்துவத்தையும் திருமந்திர சிறப்பையும் ஸ்வாமி ஓம்கார் நீண்ட உரை மூலம் விளக்கினார்.



நிகழ்ச்சியின் முடிவில் மந்திர ஜபம் மற்றும் தியானத்துடன் மக்கள் ஆன்மீக நிலையில் திளைத்தார்கள். அருள் காரியம் இனிதே சிறப்பாக நடைபெற்றது.

திரு நிகழ்காலம் சிவா, சஞ்சய் காந்தி ஆகிய பதிவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மெருகூட்டினார்கள்.

குறிப்பு : புத்தகம் விலை 80/- ரூபாய். 366 பக்கம் கொண்ட கையடக்க புத்தகம். புத்தகம் வேண்டுவோர் தபாலில் பெறலாம். தபால் செலவு தனி. குறைந்த பட்சம் 2 புத்தகத்திற்கு மேல் வாங்குபவர்களுக்கு தபால் கட்டணம் ஒரு புத்தகத்திற்கு அனுப்பினால் போதுமானது. நீங்கள் படிக்க மட்டுமல்ல பிறருக்கு பரிசாக கொடுத்து மகிழ வேண்டிய புத்தகம். அறக்கட்டளை சார்ப்பில் பெரிய புத்தகத்தின் விலையே 80 என நன்கொடையாகவே அமைக்கபட்டுள்ளது. புத்தகம் வேண்டுவோர் அதற்கான வழிமுறைகளை தொலை பேசிவாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
தொலைபேசி : +91 99 44 2 333 55.


|| ஓம் தத் சத் ||