எந்த காரியத்தையும் நாம் செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்கும் வரை அக்காரியம் தெய்வீகமானது அல்ல என்பது கர்ம யோகத்தின் சாரம். அதனால் தான் கீதையில் கர்ம யோகத்தை விளக்கும் பொழுது செயல்படு பலனை எதிர்பார்க்காதே என்கிறார்கள்.
என் அளவில் கர்மயோகத்தை பல்வேறாக ஆராய்ந்திருக்கிறேன். காந்தியடிகள் உண்மையுடன் நடத்திய சோதனை போல நான் கர்ம யோகத்துடன் பல சோதனைகள் நடத்தி உள்ளேன். சுயநலமற்ற நோக்குடன் சேவை பணிகளை ஆகாய அளவு திட்டமிட்டு விடுவேன். அதற்கான அடிப்படை வசதியும் பொருளாதாரமும் சுண்டைக்காய் அளவு கூட இருக்காது.
என்னுடன் பணி புரிபவர்கள் சில நேரத்தில் மிக குழப்பம் அடைந்து என்னை பல்வேறு எண்ணத்தில் பார்ப்பார்கள். “ஆர்வக்கோளாரு”, “இந்த ஐடியா விளங்கும்”, “இவரு மனசுல என்ன தான் நினைக்கிறார்” என பல்வேறு எண்ணத்தில் மூழ்குவார்கள். ஆனால் இறையருளால் உதவிகள் எதிர்பார்த்து சென்றால் பேருதவிகள் கிடைக்கும். தளர்ந்து போனால் உற்சாக ஊற்றாக இறைவன் கைகொடுப்பதையும் உணர்வு பூர்வமாக அனுபவித்திருக்கிறேன்.
தாய் மரம் என்ற திட்டத்தை துவங்கியதும் இப்படி பலர் எண்ணினார்கள். எப்படி சாத்தியம்? முடியுமா? என எண்ணிடமே குறைபட்டவர்களும் உண்டு.
நான் இப்படி திட்டமிடுவதற்கு அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை காரணம் இல்லை. எனக்கு என் மேல் இருக்கும் நம்பிக்கையை விட என்னுள் இருப்பவன் மேல் இருக்கும் நம்பிக்கை அதிகம்.
கடந்த வருடம் தாய்மர திட்டம் மிகவும் வேகமாக செயல்படத் துவங்கியது. இத்திட்டத்தை செயல்படுத்த புதிய கரங்களை தேர்ந்தெடுத்தோம். என் மாணவர்கள் யாரையும் அழைக்காமல், புதிய நபர்களின் துணையுடன் படிப்படியாக செயல்படுத்தினோம். என் மாணவர்களுக்கே பலருக்கு இத்தகைய திட்டம் நம் அறக்கட்டளையில் இருந்து செயல்படுத்துவது தெரியாது.
தெற்கில் கன்யாகுமர், வடக்கில் வேலூர் , கிழக்கில் பாண்டிச்சேரி, மேற்கில் ராஜபாளையம் என அனைத்து திக்கிலும், மையத்தில் மதுரையிலும் பல்வேறு அழைப்புகள். எங்கள் பயணம் நூறு ஏக்கருக்கு மேல் பரவி வருகிறது. இதனிடையில் பல்வேறு தனி நபர்களின் அழைப்புகள் எங்களின் மனதை குளிர செய்தது. எங்கள் வீடு இருக்கிறது, எனது தோட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என பல்வேறு அழைப்புகள். இவர்கள் மூலம் சேவை செய்ய இறைவன் ஊக்குவிப்பதை எண்ணி ஒவ்வொரு நாளும் பூரிப்படைந்தோம்.
வெளிநாட்டிலிருந்து வந்த எனது மாணவியும், இந்தியாவில் இருந்து சென்று பிறகு தாயகம் திரும்பிய மாணவர் ஒருவரும் இப்பணிக்கு எனது இரு கண்களாக இருந்தார்கள். தாய் மரத்திட்டத்தை உணர்ந்து தான் செய்து வந்த வெளிநாட்டு பணியை துறந்து முழுமையாக என்னுடன் செயல்படுகிறார் இந்த மாணவர். [தங்களின் சேவையை தவிர வேறு விஷயங்கள் வெளியிடுவது கூடாது என்பது அவர்களின் கட்டளை- இருந்தாலும் சில விதி மீறல்]
பல்வேறு குழுமங்களும்,அறக்கட்டளைகளும், பள்ளிகளும் எங்களுடன் கைகோர்த்தன. வெளிநாட்டிலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும் முகம் அறியாத நபர்களிடம் இருந்து பொருளாதார உதவிகள். சிலர் ஒரு படி மேலே போய் நான் டிசம்பர் மாதம் ஒரு வாரம் விடுமுறையில் இருக்கிறேன் உங்களுடன் சேவை செய்யவா? என வந்தார்கள். உதவியால் திக்குமுக்காடினோம் என்பதே சரி.
இது போக எண்ணற்ற தனி நபர்கள் தங்களுக்கு தாய்மர கன்றுகள் வேண்டும் என கேட்டார்கள். அனைவருக்கும் உதவ முடியவில்லை என்ற குறையுடன் அமர்ந்திருக்கிறோம். எங்களிடம் அதிகமான ஆட்கள் இல்லாத காரணத்தால் அனைவரிடமும் சென்று பணி செய்ய முடியவில்லை. அதனால் பலர் விரும்பி கேட்டும் அவர்களின் வீடுகளில் மரக்கன்றை வைக்க முடியவில்லை.
சேவை என ஆன பிறகு இப்படி சிலர் செயல்பட முன் வந்தும் நம்மால் அவர்களுக்கு சேவை செய்ய முடியாமல் போகலாமா? என எண்ணினேன். ஆனால் விரைவில் அதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.
இதோ...யோசனை கிடைத்து விட்டது.
நானே ஒவ்வொரு இடத்திற்கும் என் ஆட்களுடன் சென்று தாய்மர திட்டத்தை செய்வதை விட அதை உங்களுக்கே கற்றுக்கொடுத்தால் என்ன?
இது தான் அந்த யோசனை...!
இத்தனை மரங்களை நட்டேன் என விளம்பர தட்டி வைத்து பசுமை நாயகன் என்ற பட்டமோ, அடுத்த நோபல் பரிசு வாங்கும் எண்ணமோ என்னிடம் இல்லை. அதனால் இதை ரகசியம் காத்து என்ன செய்ய போகிறேன்?
ஸ்ரீராமானுஜரை போல கோபுரம் ஏறி கூவ போகிறேன்.அதை கேட்க நீங்கள் தயாரா?
நீங்களும் தாய் மரத்தின் தன்மையை புரிந்து பிறருக்கு சேவை செய்வீர்களா?
(விதை முளைக்கும்)
11 கருத்துக்கள்:
நன்று! விளக்கமாக பதிவாக போடுவீர்களா! எப்படியோ என்னால் முடிந்த அளவு முயற்சி செய்ய தயாராக இருக்கிறேன்! நன்றி!
அன்பின் ஓம்கார் - பணி நிறைவு செய்தாயிற்று - அதனால் கேட்கத் தயார் - பிறகு சேவை செய்யவும் தயார் - பார்த்து விடுவோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நீங்களும் தாய் மரத்தின் தன்மையை புரிந்து பிறருக்கு சேவை செய்வீர்களா?
yes yes yes
நல்ல முயற்சி. தாயகம் திரும்பியப் பின் நானும் பங்கெடுக்கிறேன்
என்ன என்ன மரச்செடிகள் வைக்க வேண்டும், எங்கே கிடைக்கும், அதை நிலத்தில் எந்தவிதமாக நட்டு பராமரிக்க வேண்டும் என விவரமாக சொல்லிவிடுங்களேன்...
Yes, Swami Omkar Ji. Let me learn and will work for chennai people here.
Umashankar.A
அடியேன் தயார் ... முடிந்த வரை உதவி முயலலாம்
//இத்தனை மரங்களை நட்டேன் என விளம்பர தட்டி வைத்து பசுமை நாயகன் என்ற பட்டமோ, அடுத்த நோபல் பரிசு வாங்கும் எண்ணமோ என்னிடம் இல்லை.//
அப்படி ஒரு எண்ணமே இல்லாத பட்சத்தில் ....இந்த வரியை கூட எழுத வேண்டிய அவசியமே இல்லையே ஸ்வாமி...
இறைவன் அருள் மழை பொழியட்டும் :)
என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள். காத்துகொண்டு இருக்கிறேன்.
எங்கும் நிறை பரபிரமம் தங்கள் பணியை தொடர்ந்து செய்ய எல்லா வளமும் அருளட்டும்
அப்பாடா! மெய்ல் போட்டு பலன் இல்லை. தொலை பேசியில் பேசப்பார்த்தல் பிஸி என்று சொல்லிவிட்டீங்க! இப்படியாவது தெரிஞ்சு செயல் படுத்தலாம். மேலே ஆகட்டும்!
Post a Comment